×
Saravana Stores

திருச்சானூரில் 3வது நாள் வருடாந்திர பிரமோற்சவம் முத்துபந்தல் வாகனத்தில் தாயார் பக்தர்களுக்கு அருள்பாலிப்பு-இன்று கற்பகவிருட்ச வாகனம்

திருமலை : திருச்சானூரில் 3வது நாள் வருடாந்திர பிரமோற்சவத்தில் நேற்று முத்துபந்தல் வாகனத்தில் பத்மாவதி தாயார் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, பிரமோற்சவத்தின் 4வது நாளான இன்று கற்பகவிருட்ச வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டத்தில் உள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தையொட்டி வருடாந்திர பிரமோற்சவம் நடைபெறும். அதன்படி, இந்த பிரமோற்சவம் கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பிரமோற்சவத்தின் முதல் நாளான கடந்த 20ம் தேதி சின்ன சேஷ வாகனம், பிரமோற்சவத்தின் 2ம் நாளான நேற்று முன்தினம் காலை ஏழு தலை கொண்ட பெரிய சேஷ வாகனத்தில் தாயார் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பிரமோற்சவத்தின் 3வது நாளான நேற்று காலை முத்துபந்தல் வாகனத்தில் தாயார் நாரை வடிவில் வந்து பகாசுரன் எனும் அரக்கனை வதம் செய்யும் அலங்காரத்தில்  பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது மங்கள வாத்தியங்கள் முழங்க, பக்தர்களின் கோவிந்தா?, கோவிந்தா? என்ற பக்தி முழக்கத்திற்கு மத்தியில் சுவாமி வீதி உலா வந்தனர். குதிரைகள், காளைகள் மற்றும் யானைகள் வீதி உலாவிற்கு முன்பு அணிவகுத்து சென்றது.

வீதியுலாவில் ஒவ்வொரு அடியிலும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து மனம் உருகி தாயாரை வழிபட்டனர்.    வெண்ணிற முத்துக்களால் அமைக்கப்பட்ட பந்தலில் தாயார் எழுந்தருளியதை காணும்  பக்தர்களின் இன்னல்கள் நீங்கி மகிழ்ச்சியாக  மாறும் என்பது நம்பிக்கையாகும். வீதி உலாவை தொடர்ந்து மதியம் கோயில் வளாகத்தில் கிருஷ்ண சுவாமி மண்டபத்தில் தாயாருக்கு  மஞ்சள், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு திருமஞ்சனம்  நடைபெற்றது.

இதனை தொடர்ந்து மாலை  ஊஞ்சல் சேவையும், இரவு  சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏழுமலையான் கோயில் ஜீயர்கள்,  சந்திரகிரி தொகுதி எம்எல்ஏ செவிரெட்டிபாஸ்கர்ரெட்டி, தேவஸ்தான நிர்வாக குழு உறுப்பினர்   போகலா அசோக்குமார், இணை செயல் அதிகாரி வீரபிரம்மம், கோயில் துணை  செயல் அதிகாரி லோகநாதம், ஆகம ஆலோசகர் ஸ்ரீனிவாச்சாரியார் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.பிரமோற்சவத்தின் 4ம் நாளான இன்று காலை கற்பகவிருட்ச வாகனம், இரவு அனுமந்த வாகனம் நடைபெற உள்ளது. தொடர்ந்து, 5ம் நாளான நாளை காலை பல்லக்கு உற்சவம், இரவு கஜ வாகனத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

Tags : 3rd ,Annual Pramotsavam Muthubandal Vahanam ,Karpagavirtsa , Tirumala: Mother Padmavati graced the devotees on the 3rd day of the annual Brahmotsavam at Tiruchanur yesterday in the Muthubandal vehicle.
× RELATED திருவெறும்பூரில் ரேஷன் கடை பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்தம்