நான் முதல்வன் திட்டம் மூலம் பல பெண்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சென்னை ராணிமேரி கல்லூரியின் 104 வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். இதில் 2,702 மாணவிகள் இளங்கலை பட்டமும், 473 மாணவிகள் முதுநிலை பட்டமும் 84 மாணவிகள் ஆய்வியல் நிறைஞர் பட்டம் என்று மொத்தம் 3,259 பேர் பட்டம் பெற்றனர்.

மாணவிகளுக்கு பட்டம் வழங்கிய பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தைப் பொறுத்தவரை முதல் மகளிர் கல்லூரி என்றால் அது ராணி மேரி கல்லூரி தான். இது 104வது பட்டமளிப்பு விழா என்றால், இந்த நூறு ஆண்டு காலத்தில் எத்தனை லட்சம் மகளிர் படித்து பட்டம் பெற்றிருப்பார்கள். எத்தனை லட்சம் பேருக்கு கல்வியை, அறிவை, ஆற்றலை, வேலை வாய்ப்பை, தன்னம்பிக்கையை வாழ்க்கையை இந்த கல்லூரி உருவாக்கி இருக்கும் என்பதை கணக்கிட்டு பார்த்தால் மலைப்பாக இருக்கும். ராணி மேரி கல்லூரியை வெறும் கல்லூரியாக மட்டும் சொல்ல முடியாது. என்னுடைய வாழ்நாளில் எத்தனையோ நிகழ்ச்சிகள், மறக்க முடியாத நிகழ்ச்சிகளாக இருந்தாலும், ராணிமேரி கல்லூரிக்காக போராடிய மாணவிகளுக்கு நான் ஊக்கப்படுத்துகின்ற நேரத்தில், நான் சிறைபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, சிறையில் இருந்தது என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத, ஒரு சம்பவமாக இன்றைக்கும் இருந்து கொண்டிருக்கிறது.

இந்த ராணிமேரி கல்லூரியில் 3.2 கோடி ரூபாய் மதிப்பில் கலைஞர் மாளிகை கட்டப்பட்டது. ஆனால் கடந்த கால ஆட்சியாளர்கள் கலைஞர் என்கின்ற பெயரை நீக்கிவிட்டார்கள். அதனை மீண்டும் இப்போது நாம் சூட்டியிருக்கிறோம். கட்டிடங்களில் இருக்கும் பெயரை நீக்குகிற காரணத்தால் கலைஞருடைய பெயரை மக்கள் மனதில் இருந்து நீக்கிவிட முடியாது. இக்கல்லூரியினுடைய 104-ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உங்களுக்கு பட்டங்களை வழங்குவது எனக்குக் கிடைத்த பெருமை. 21 துறைகளைச் சேர்ந்த 3,259 மாணவியர்கள் பட்டம் பெறுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் முதல் தலைமுறைப் பட்டதாரிகள் என்பதுதான் இரட்டிப்பு மகிழ்ச்சி. ‘அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பு எதற்கு?’ என்று கேட்ட காலத்தில், சமையல் கரண்டி பிடித்திருக்கும் கையில், புத்தகத்தைக் கொடுங்கள் என்று சொன்னவர் தந்தை பெரியார். அவரைப் போன்ற சீர்திருத்தவாதிகளால்தான் பெண் சமூகத்தில் ஒரு புரட்சிகரமான மாற்றம் நிகழத் தொடங்கியது.

இந்த அரங்கில் இன்று நாம் காணும் இந்தக் காட்சி நூற்றாண்டு காலப் போராட்டத்தின் விளைவு தான் இங்கே உங்களை காணுகின்ற காட்சி. பட்டத்தை வாங்கியிருக்கக்கூடிய உங்களைப் பார்க்கிற காட்சி. அதனால்தான் முதல் தலைமுறை பட்டதாரிகளாகிய நீங்கள் உங்களுக்கு அடுத்தடுத்து வரும் தலைமுறைகளை படிக்க வைக்க வேண்டும். உங்களது பெயருக்குப் பின்னால் பட்டம் இருப்பது கவுரம் மட்டுமல்ல - அது உங்கள் அடிப்படை உரிமை. இந்தப் பட்டமளிப்பு விழாவுக்கு இன்னொரு சிறப்பு என்ன என்றால், மாற்றுத்திறனாளிகளான ஆறு பெண்கள் இன்று பதக்கம் பெறுகிறார்கள் என்பதுதான் மிக மிகச் சிறப்பு. திமுக ஆட்சி காலத்தில், பெண்கள் முன்னேற்றத்துக்காக ஏராளமான திட்டங்களைத் தீட்டியது. அந்த வரிசையில்தான் மகளிருக்கு கட்டணமில்லாத பேருந்து பயணத்தை உருவாக்கிக் கொடுத்தோம்.

இது ஏதோ கட்டண சலுகை அல்ல, பெண்களுக்கான பொருளாதார தன்னிறைவுக்கு அடித்தளம் அமைக்கும் திட்டம். இதன் மூலமாக ஏராளமான பெண்கள் கல்வி கற்கவும், வேலைகளுக்காகவும், சிறுதொழில் நிறுவனங்களை உருவாக்கவும் வெளியில் வரத் தொடங்கி இருக்கிறார்கள். இந்த கல்லூரியிலேயே தங்கி படிக்க விடுதி கட்டிடம் அமைக்க வேண்டும் என கல்லூரி நிர்வாகம் கோரிக்கை விடுத்தது. கல்லூரி வளாகத்திற்கு உள்ளே விடுதி கட்டிடம் ஒன்று அமைக்கப்படும். ‘நான் முதல்வன்’ திட்டத்தை மாணவிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த திட்டம் மூலம் பல பெண்கள் வேலை வாய்ப்புகள் பெற்றுள்ளார்கள். பல மாணவிகள் பல விளையாட்டு பிரிவுகளில் தேசிய அளவில் சாதனைகள் புரிந்துள்ளார்கள். பேராசிரியைகளும் மாணவிகளுக்கு இணையான சாதனைகளை புரிந்துள்ளார்கள். நூற்றாண்டுகளுக்கும் மேலாக கல்வி சேவை ஆற்றிவரும் கல்லூரி.

பெண் கல்வி முன்னேற்றத்துக்கு தொடர்ந்து செயல்பட வேண்டும். மாணவிகளும் கல்லூரியை போல உயரிய நோக்கத்துடன் இருக்க வேண்டும். இன்றைய பட்டம் முடிவு அல்ல துவக்கம். இவ்வாறு முதல்வர் பேசினார். இதில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசும்போது, ‘‘ 33 மாணவிகளுடன் துவங்கப்பட்ட கல்லூரியில் இன்று 5,000 மாணவிகள் படிக்கிறார்கள் என்று சொன்னால் அதுதான் திராவிட மாடல் ஆட்சி. புதுமை பெண் திட்டம் மூலம் மாணவிகள் மாதம் 1000 ரூபாய் பெறுகிறார்கள். இந்த சாதனைக்கு முதல்வர் ஸ்டாலின்தான் சொந்தக்காரர். 3ம் வகுப்பு, 8ம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு கொண்டு வர முயற்சி செய்கிறார்கள். இது நடைமுறைக்கு வந்தால் பள்ளி இடைநிற்றல் தான் அதிகரிக்கும்.  இவ்வாறு அவர் பேசினார் என்றார்.

Related Stories: