×

இலங்கை சிறையில் இருந்து விடுதலையான ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் சென்னை வந்தனர்

சென்னை: ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர், 2 படகுகளில் கடந்த 5ம் தேதி நள்ளிரவில் ராமேஸ்வரம் கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அங்கு வந்த இலங்கை கடற்படையினர் வந்து, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, மீனவர்கள் 15 பேரையும் 2 படகுகளுடன் கைது செய்து, இலங்கைக்கு அழைத்துச்சென்றனர். அதன்பின்பு மீன்களையும், படகுகளையும் பறிமுதல் செய்துவிட்டு, 15 தமிழக மீனவர்களையும் இலங்கை சிறையில் அடைத்தனர். இதையடுத்து மீனவர்களின் குடும்பத்தினர், இலங்கையில் கைது செய்த மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

இதையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மற்றும் ஒன்றிய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு கடிதங்கள் எழுதினார். இதையடுத்து இலங்கை நீதிமன்றம், இம்மாதம் 17ம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. விடுதலை செய்யப்பட்ட 15 ராமேஸ்வரம் மீனவர்களும் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். விடுதலையான 15 பேரில் 7 பேர் நேற்று இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முன்னதாக சென்னை விமான நிலையம் வந்த மீனவர்களை தமிழக அரசு சார்பில் மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர்‌.


Tags : Rameswaram ,Chennai , 7 Rameswaram fishermen who were freed from Sri Lankan prison came to Chennai
× RELATED ராமேஸ்வரத்தில் முருகன் கோயில் வாசலை...