ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு ஒப்புதல் அளிப்பதில் தாமதம்: ஆளுநரை சந்திக்க சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திட்டம்

சென்னை: ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் சட்ட முன்வடிவு தொடர்பாக தமிழக ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார். சென்னை, தலைமை செயலகத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்தல், ஒழுங்குபடுத்துதல் சட்ட முன்வடிவு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. ஆளுநரின் ஒப்புதல் கிடைத்த பிறகு அது சட்டமாக அமல்படுத்தப்படும். தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய அவசர சட்டத்துக்கு ஆளுநர் அன்று மாலையே அனுமதி அளித்துவிட்டார்.

அவசர சட்டத்தில் இருக்கும் சரத்துக்கள் தான் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்தல் சட்ட மசோதாவிலும் இருக்கிறது. இதில்  கேள்வி கேட்பதற்கான அல்லது சந்தேகம் எழுவதற்கான இடமே கிடையாது. அதற்கான வாய்ப்புகள் மிகமிக குறைவுதான். இருந்தாலும், நாங்கள் அதுபற்றி வேறு கருத்துக்களை சொல்ல முடியாது. ஆளுநர் ஏன் அனுமதிக்காமல் வைத்திருக்கிறார் என்ற காரணத்தை சொல்ல முடியாது. ஆளுநரை சந்திப்பதற்காக நானும், உள்துறை செயலாளரும் நேரம் கேட்டு மனு கொடுத்திருக்கிறோம். நிச்சயமாக நேரம் கிடைத்த பிறகு ஆளுநரை சந்தித்து இதுகுறித்து கருத்துக்களை எடுத்துச் சொல்லி, அவர் ஏதாவது சந்தேகங்களை கேட்டால், அந்த சந்தேகங்களை அவரிடத்தில் சொல்லி அதற்கான ஒப்புதல் பெறுவதற்கு முயற்சி செய்வோம். நிச்சயமாக இன்று அல்லது நாளை சந்திக்க அனுமதி கிடைத்துவிடும் என்று நம்புகிறோம்.

முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் திமுக சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்வது, மற்ற தோழமை கட்சிகள் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. திமுக அரசின் கருத்துக்கள், தமிழக அரசின் கருத்துக்களாகத்தான் இருக்கும். திமுக சார்பில் தாக்கல் செய்யப்படும் சீராய்வு மனுவில், எல்லா கருத்துக்களும் ஒட்டுமொத்தமாக உள்வாங்கி நிச்சயமாக சிறப்பாக ஒரு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும். ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அன்றைக்கு பெறப்பட்டுள்ளது. எனவே, ஜல்லிக்கட்டு போராட்டத்தை பொறுத்தவரைக்கும் மேல்முறையீட்டு மனு அதாவது சீராய்வு மனு வருகின்றபோது அதில் தமிழக அரசு தகுந்த வாதங்களை எடுத்து வைத்து ஜல்லிக்கட்டு விளையாட்டு என்பது தமிழகத்தில் தொடர்ந்து நடத்துவதற்கு உரிய சட்ட பாதுகாப்புக்களை நாங்கள் செய்து தருவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: