யூடியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: கமிஷனர் அலுவலகத்தில் அதிமுக புகார்

சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாஜவில் இணைவதாக அவதூறு பதிவு செய்த யூடியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக சார்பில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அதிமுக ஐடி பிரிவு செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் என்பவர் நேற்று அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: அதிமுக கோவை மண்டல ஐடி பிரிவு செயலாளரான நான் உள்ளேன். ஒரு குறிபிட்ட யூடியூப் செய்தி சேனலில் கடந்த 19ம் தேதி ‘துணை முதல்வர் பதவி.. பாஜவில் இணையும் எஸ்.பி.வேலுமணி.. எடப்பாடிக்கு குட்பை...’ என்ற தலைப்பில் செய்தி ஒன்று பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ பதிவு உண்மைக்கு புறம்பாக முற்றிலும் பொய்யான அவதூறு தகவல்களை கொண்டது. அதிமுக தலைமை நிலைய செயலாளர் மற்றும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா என்ற நிலையை அடைந்திருக்கும் எஸ்.பி.வேலுமணி பெயருக்கும், புகழுக்கும் பொய்யான செய்திகளை வீடியோவாக பதிவு செய்த யூடியூப் சேனல் மற்றும் அதன் உரிமையளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: