ராகுல் மீது பிரதமர் மோடி பாய்ச்சல் மீண்டும் ஆட்சியை பிடிக்க பாதயாத்திரை

சுரேந்திரநகர்: பதவியில் இருந்து துாக்கி எறியப்பட்டது காங்கிரஸ் என்றும் மீண்டும் ஆட்சியை பிடிக்க ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டுள்ளார் என்று பிரதமர் மோடி சாடினார். குஜராத் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 1 மற்றும் 5ம் தேதிகளில் நடக்கிறது. இதையொட்டி பிரதமர் மோடி சுரேந்திர நகரில் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: தேர்தலில் வளர்ச்சி குறித்து காங்கிரசார் பேசுவது இல்லை. அதற்குபதில் தேர்தலில் மோடியின் தகுதியை காட்டுவோம் என்று கூறுகின்றனர். இது அவர்களுடைய ஆணவத்தை காட்டுகிறது. அவர்கள் ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம். ஆனால் இது போன்ற எந்த தகுதியும் இல்லாத வேலைக்காரனாக நான் உள்ளேன்.

இதற்கு முன்னர்  தரம் தாழ்ந்த மனிதர், மரணத்தின் வியாபாரி, சாக்கடை புழு என்று என்னை கீழ்த்தரமாக அவர்கள் விமர்சித்தனர். நமது நாட்டை வளர்ச்சி அடைந்ததாக மாற்ற இது போன்ற அவமதிப்புகளை நான் விழுங்கி கொள்கிறேன்.

நீண்ட நாளுக்கு முன் ஆட்சி கட்டிலில் இருந்து காங்கிரஸ் அகற்றப்பட்டது. இழந்த ஆட்சியை பிடிக்க சிலர் நடைபயணம் செய்கின்றனர். நடைபயணம் செய்பவர்களையும் குஜராத்துக்கு எதிராக செயல்பட்டவர்களையும் தேர்தலில் மக்கள் தண்டிப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார். ராகுல்காந்தி நடைபயணத்தின் போது நர்மதா அணைத் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய மேதா பட்கரும் கலந்து கொண்டார். அதை மறைமுகமாக குறிப்பிட்டு மோடி இவ்வாறு பேசினார்.

* 71,000 பேருக்கு பணி நியமன ஆணை

நாடு தழுவிய அளவில் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் வேலை வாய்ப்பு திருவிழாவை கடந்த மாதம் 22ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதன்படி மாதந்தோறும் 75 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கப்படும் என்று ஒன்றிய அமைச்சர் பூபேந்தர் யாதவ் கடந்த மாதம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், 71 ஆயிரம் இளைஞர்களுக்கு பணி நியமன கடிதத்தை பிரதமர் மோடி இன்று வழங்குகிறார். காணொலி மூலம் நடக்கும் விழாவில் இளைஞர்களிடம் அவர் உரையாற்றுவார் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: