×

தமிழ் திரையுலகின் பிரபல வசனகர்த்தா ஆரூர்தாஸ் வயது மூப்பு காரணமாக சென்னையில் மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

சென்னை: சென்னையில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்த தமிழ் திரையுலகின் பிரபல வசனகர்த்தா ஆரூர்தாஸ் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு திரை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். சிவாஜி கணேசன் நடித்த பாசமலர், படித்தால் மட்டும் போதுமா, பார் மகளே பார் உள்ளிட்ட திரைப்படங்கள் மற்றும் எம்.ஜி.ஆர். நடித்த தாய் சொல்லை தட்டாதே, தாயைக்காத்த தனயன், அன்பே வா, குடும்ப தலைவன், நீதிக்கு பின் பாசம், பெற்றால் தான் பிள்ளையா உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியவர் ஆரூர்தாஸ்.

ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியோரது படங்களுக்கும் அவர் வசனம் எழுதி இருக்கிறார். 1955-ம் ஆண்டு முதல் 2014-வரை 1000 படங்களுக்கு ஆரூர்தாஸ் வசனகர்த்தாவாக பணியாற்றினார். சென்னை தியாகராயநகரில் வசித்து வந்தவர் வயது மூப்புக்கரணமாக நேற்று மாலை உயிரிழந்தார். தியாகராயநகரில் வைக்கப்பட்டு இருக்கும் அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். கவிஞர் வைரமுத்து, நடிகர்கள் பாக்கியராஜ், சிவகுமார், மனோபாலா உள்ளிட்ட திரை பிரபலங்கள் ஆரூர்தாஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

திருவாரூர் மாவட்டத்தில் பிறந்தவர் திருவாரூர் பெயரில் பிற்பாதியும் யேசுதாஸ் என்ற அவருடைய பெயரில் பிற்பாதியை இணைத்து ஆரூர்தாஸ் என்று பெயரை மாற்றி கொண்டார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகியோரது பெரும்பாலான படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதிய இவர் பாமரமக்கள் மனதிலும் பாசமலர் திரைப்பட வசனங்கள் மூலமாக நீங்கா இடம்பெற்றவர். 1000 படங்களுக்கு மேல் வசனம் எழுதிய ஆரூர்தாஸின் உடல் சென்னை மந்தைவெளி பாக்கம் கல்லறையில் இன்று மாலை அடக்கம் செய்யப்படுகிறது.


Tags : Auroordas ,Chennai ,Chief Minister ,M.K.Stalin , Narrator, Auroordas, Death, Chief Minister, Anjali
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...