×

மருத்துவ கவுன்சில் தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும்: தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தேர்தலை நியாயமாக நடத்த நடவடிக்கை எடுக்க  வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து  அவர் வெளியிட்ட அறிக்கையில்: தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தேர்தல்  2023ம் ஆண்டு ஜனவரி 19ம் தேதி வரை நடைபெறும் என்று  அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தேர்தல் நடத்தப்படும் விதம் குறித்து  மருத்துவர்கள் மத்தியில் பல்வேறு ஐயங்கள் எழுந்துள்ளது. அதில் 92,198 பதிவு மருத்துவர்கள் மட்டும் தான் இடம்  பெற்றுள்ளனர். ஆனால், தமிழ்நாட்டில் பதிவு பெற்ற  மருத்துவர்களின் எண்ணிக்கை 1.60 லட்சத்துக்கும் கூடுதலாக இருக்கும்.

தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்களில் சுமார் 70,000 பேரை  தவிர்த்து விட்டு மீதமுள்ளவர்களை மட்டும் வைத்துக் கொண்டு தேர்தல்  நடத்துவது நேர்மையானதாகவோ, அனைவருக்கும் சமவாய்ப்பு அளிப்பதாகவோ அமையாது  என்பது தான் மருத்துவர்களின் புகார். அறிவியலும்,  தொழில்நுட்பமும் வளர்ந்திருக்கும் இந்த காலகட்டத்தில், அதிகம்  படித்தவர்களான மருத்துவர்களை அஞ்சல் முறையில் மட்டும் தான் வாக்களிக்க  வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது  எந்த வகையில் நியாயமல்ல.

தமிழ்நாடு மருத்துவக்  கவுன்சில் மிகுந்த அதிகாரம் பெற்ற அமைப்பாகும். அந்த அமைப்பின் நிர்வாகிகள்  மிகவும் நேர்மையான முறையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதை உறுதி  செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரை  தேர்தல் அதிகாரியாக நியமித்து, ஆன்லைன் முறையில் வாக்களிக்கும் வகையில்  தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தேர்தலை நடத்த தமிழ்நாடு மருத்துவக்  கவுன்சிலும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : Medical Council elections ,Ramadoss ,Tamil Nadu government , Medical Council elections should be conducted fairly: Ramadoss urges Tamil Nadu government
× RELATED விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை ராமதாஸ் வலியுறுத்தல்