×

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்வதால் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதால் தமிழக கடலோரப் பகுதியில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தற்போது தீவிரம் அடைய தொடங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த  தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

அது நேற்று மாலையில் காரைக்காலுக்கு நேர் கிழக்கே 580 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கே 620 கிமீ தொலைவிலும்  நிலை கொண்டு இருந்தது. அது ஒரு மணி நேரத்துக்கு 6 முதல் 8 கிமீ வேகத்தில் நகர்ந்து வந்தது. பின்னர், நேற்று இரவு மணிக்கு 15 கிமீ வேகத்தில் நகரத் தொடங்கி நள்ளிரவுக்கு பிறகு மணிக்கு 50 கிமீ வேகமாக மாறியது. இதனால், வட தமிழகத்தை ஒட்டிய கடலோரப் பகுதிக்கு வந்தது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஆகிய பகுதிகளில் இன்று கனமழை பெய்யும். இந்நிலையில், இன்று அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு நோக்கி நகர்ந்து ஆந்திராவின் நெல்லூர்-ஓங்கோல் இடையே வலுவிழக்கும் வாய்ப்புள்ளது.

இதனால் தெற்கு ஆந்திரா, கர்நாடகா மற்றும் வடதமிழகத்தில் கனமழை பெய்யும். தமிழகத்தின் கடலோரத்திலும் மழை பெய்யும். இந்த நிகழ்வின் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிக கனமழைபெய்யும். பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யும். இதற்கிடையே, ஜப்பான், கிழக்கு சீனா, தைவான், வியட்நாம், மியான்மர் வழியாக குளிர் அலை வங்கக் கடலுக்கு நுழைந்து அந்தமான்  வழியாக தமிழக கடலோரப் பகுதிக்கு நுழையத் தொடங்கியுள்ளதால் இன்று தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கடுங்குளிர் நிலவும்.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்த பிறகு மீண்டும் தமிழகம் நோக்கி திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் காரணமாக விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை,  மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில்  இன்று கனமழை பெய்யும். நாளை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், மாவட்டங்்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். இந்த நிகழ்வின் காரணமாக இன்று முதல் 22ம் தேதி வரை ஆந்திர கடலோரப் பகுதிகள், தமிழக-புதுச்சேரி கடலோரப் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகள், தென்மேற்கு வங்கக் கடல்  மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 கிமீ வேகத்தில் வீசும். இவ்வாறு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai Meteorological Inspection Centre , Heavy rain in Tamil Nadu for the next 2 days due to the movement of low pressure zone: Chennai Meteorological Department
× RELATED மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு...