கரூரில் விஷவாயு தாக்கி 4 பேர் பலி; பாதுகாப்பின்றி கட்டுமான பணியில் தொழிலாளர்கள் ஈடுபடக் கூடாது: தேசிய பட்டியல் இன ஆணைய துணை தலைவர் அறிவுறுத்தல்

கரூர்: கரூரில் விஷவாயு தாக்கி 4 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, பாதுகாப்பு இல்லாத கட்டுமான பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்ட கூடாது என்று, தேசிய பட்டியல் இன ஆணைய துணை தலைவர் அருண்ஹெல்டர் கூறினார். கரூர் மாவட்டம், சுக்காலியூர் காந்தி நகர் பகுதியில் தனி நபர் வீடு கட்டுமான பணியின் போது, நீர்நிலை தொட்டியில் கான்கீரிட் பலகைகள், பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் சவுக்கு கட்டைகளை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது மூச்சு திணறல் ஏற்பட்டு 4 பேர் உயிர் இழந்தனர்.

இந்த வீட்டை, தேசிய பட்டியல் இன ஆணையத்தின் துணை தலைவர் அருண்ஹெல்டர், கலெக்டர் பிரபுசங்கர், திருச்சி மத்திய மண்டல ஐஜி சந்தோஷ்குமார் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் பலியானவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அருண்ஹெல்டர் ஆறுதல் கூறினார். அப்போது, தேசிய பட்டியல் இன ஆணையத்தின் துணை தலைவர் அருண்ஹெல்டர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அங்கீகாரம் வாங்காமல் கட்டுமானம் கட்டுவது தவறான ஒன்று.

அதேபோல் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுப்பது கடமையாக இருக்க வேண்டும். இதில் மாநகராட்சி அதிகாரி தவறு செய்ததற்காக அவரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. வரும் காலங்களில் இது போன்று நடைபெறாமல் இருக்க, இது குறித்து போதுமான அளவு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பாதுகாப்பு இல்லாத கட்டுமான பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபடக்கூடாது. இது போன்ற மரணங்கள் வரும் காலங்களில் நடக்கக்கூடாது என்றார்.

Related Stories: