×

வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து மேற்கொள்ளவேண்டும்: அமைச்சரிடம் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ மனு

திருவள்ளூர்: பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம் பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது; சென்னை - அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில் வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை ஆகிய ரயில் நிலையங்கள் அமைந்துள்ளது. வேப்பம்பட்டு ரயில் நிலையத்தின் அருகே ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில்வே கேட் வழியாக, தினமும், ஆயிரக்கணக்கானோர் வேலைக்கும்  மருத்துவ சிகிச்சைக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கும் செல்கின்றனர். இந்த தண்டவாளம் வழியாக தினமும் 250க்கும் மேற்பட்ட புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதனால் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு 2011ம் ஆண்டு, சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின் கீழ் புதிய மேம்பால கட்டுமானப் பணிக்கு மட்டும் ஒப்பந்தம் விடப்பட்டு துவங்கியது. அப்பகுதியை சேர்ந்த ஒருவர், பாலம் இறங்கும் பகுதியை மாற்றி அமைக்கவேண்டும் என்று புகார் அளித்ததன் பேரில், இடம் மாற்ற செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, 10 மாதங்கள் கழித்து, 12.3.2012ம் தேதி, வல்லுநர் குழுவினர் நிராகரித்த, ஒன்றாவது எல்லையில் பணிகள் மீண்டும் துவங்கப்பட்டது. இதனால் வேப்பம்பட்டு ரயில்வே கேட் மூடப்பட்டது. இதன்காரணமாக இதனால் வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மற்றோரு ரயில்வே கேட்டை கடந்து தான் பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள் செல்ல வேண்டியிருந்தது.

இந்த வழக்கில் கடந்த 2021 டிசம்பரில் நீதிமன்றம் மீண்டும் ரயில்வே  மேம்பாலப்  பணிகளை தொடங்க உத்தரவிட்டது. ஆனால் பணிகள் இன்னும் நிறைவு பெறவில்லை. செவ்வாப்பேட்டை ரயில் நிலையத்தின் அருகே ரயில்வே கேட் உள்ளது. இங்கு பொது மக்களின் கோரிக்கையை ஏற்று  ரயில்வே நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் கடந்த 2011ம் ஆண்டு,  ரயில்வே மேம்பாலம் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. பாலம் கட்டும் பணி அதே ஆண்டு துவக்கப்பட்டதால் ரயில்வே கேட் மூடப்பட்டது.

இதன்காரணமாக செவ்வாப்பேட்டை ரயில் நிலையம் அருகில் உள்ள சுரங்கப்பாதை வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள், ஆட்டோவில் செல்பவர்கள் கடந்து சென்றனர்.  ஆனால் தற்போது அந்த சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கி இருப்பதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலைமை உள்ளது. எனவே, வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை ரயில்வே மேம்பாலப்பணிகள் விரைந்து மேற்கொள்ள நிலம் கையகப்படுத்துதல் பணிகளை துரிதப்படுத்தி, மேம்பால கட்டுமான பணிகளை விரைந்து முடிக்கவேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

Tags : Vepampatu ,Chevvapet ,A. Krishnasamy ,MLA , Vepampatu, Chevvapet railway flyover work should be carried out urgently: A. Krishnasamy MLA petition to the minister
× RELATED பரிவாக்கம் சந்திப்பு,...