×

மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் 83 ஆயிரத்து 350 ஏக்கர் சம்பா நெற்பயிர் பாதிப்பு; தொடர்ந்து நடக்கும் கணக்கெடுப்பு பணி

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழையால் இது வரை 83 ஆயிரத்து 350 ஏக்கர் சம்பா பாதிக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறை கணக்கெடுக்கும் பணியில் தெரியவந்துள்ளது. மேலும் வயலில் தண்ணீர் வடிய, வடிய கணக்கெடுக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியில் தமிழகம் முழுவதும் கடந்த வாரத்தில் தொடர் மழை பெய்தது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 11, 12ம் தேதி வரை இடைவிடாமல் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சீர்காழியில் ஒரே நாளில் 44 சென்டி மீட்டர் மழை பதிவானது. இந்த கனமழையால், மயிலாடுதுறை மாவட்டத்தில் கொள்ளிடம், சீர்காழி பகுதி வெள்ளக்காடாக காட்சியளித்தது. மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டில் ஒரு லட்சத்து 73 ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இந்த கனமழையால் சம்பா சாகுபடி தண்ணீரில் மூழ்கியது. மேலும் 15,000 குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து நின்றது.

இந்நிலையில் குடியிருப்புகளை சுற்றி சூழ்ந்திருந்த மழைநீர் வடிய துவங்கியது. மேலும் 80 சதவீத வயல்களில் தேங்கியிருந்த மழைநீர் வடிந்து விட்டது. 20 சதவீத வயல்களில் மழைநீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும் வேளாண்மைத்துறை மூலம் வெள்ளத்தில் சேமான சம்பா பயிர் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. இது வரை கணக்கெடுத்ததில் மயிலாடுதுறை தாலுகாவில் 8 ஆயிரம் ஏக்கர் சம்பா, குத்தாலம் தாலுகாவில் 3,850 ஏக்கர், சீர்காழி தாலுகாவில் 23,750 ஏக்கர், கொள்ளிடம் தாலுகாவில் 24,750 ஏக்கர், செம்பனார்கோவில் தாலுகாவில் 23,000 ஏக்கர் சம்பா பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் இது வரை 83 ஆயிரத்து 350 ஏக்கர் சம்பா பயிர் பாதிக்கபட்டுள்ளதாக கணக்கு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 2,120 ஏக்கர் கரும்பு பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் வடிய, வடிய கணக்கெடுப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



Tags : Mayiladuthurai district , 83 thousand 350 acres of samba rice crop affected by heavy rain in Mayiladuthurai district; Ongoing survey work
× RELATED கொள்ளிடம் பகுதியில் உளுந்து, பயறு சாகுபடி பரப்பளவு குறைந்தது