குஜராத்தில் ராகுல் காந்தி நாளை தேர்தல் பிரசாரம்

ராஜ்காட்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாளை குஜராத்தில் இரண்டு இடங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். குஜராத் மாநிலத்தில் வரும் 1, 5ம்  தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, காங்கிரஸ், பாஜ மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. காங்கிரஸ் சார்பில் பல்வேறு தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையில் ஈடுபட்டு இருந்ததால் பிரசாரத்தில் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில், ராஜஸ்தான் எம்எல்ஏவும், குஜராத் காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளருமான ரகு சர்மா குஜராத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 21ம் தேதி (நாளை) தெற்கு குஜராத்தில் உள்ள ராஜ்காட் மற்றும் மகுவாவில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்கிறார்,” என்றார். ராகுலின் ஒற்றுமை யாத்திரை மகாராஷ்டிராவில் தற்போது நடைபெற்று வருகின்றது. இன்று இந்த யாத்திரை மத்தியப் பிரதேசத்துக்குள் நுழைகிறது. ராகுல் காந்தி தனது யாத்திரையை தொடங்குவதற்கு முன்னதாக செப்டம்பர் 5ம் தேதி அகமதாபாத்தில் பூத் அளவிலான காங்கிரஸ் தொண்டர்களை சந்தித்து பேசினார். தற்போது அவர், இரண்டரை மாதங்களுக்கு பின் அவர் குஜராத் செல்கிறார்.

Related Stories: