×

அங்கன்வாடிகளுக்கு சத்துமாவு கொள்முதல் ரூ.799 கோடி டெண்டருக்கு தடை கோரிய மனு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு சத்துமாவு கொள்முதல் செய்ய ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குனர் கடந்த 7ம் தேதி டெண்டர் கோரியிருந்தார். இந்த டெண்டரில், கடந்த மூன்று ஆண்டுகளில் ஆண்டுக்கு ரூ.20 கோடி அளவுக்கு சப்ளை செய்திருக்க வேண்டும், ஐ.எஸ்.ஓ. தர சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.

இந்த நிபந்தனைகள் தன்னிச்சையானவை என்று கூறி, இந்த டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என பெங்களூருவைச் சேர்ந்த சிவகங்கா என்டர்பிரைசஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அந்த மனுவில், சிறிய நிறுவனங்களை டெண்டரில் கலந்து கொள்ள விடாமல் தடுக்கும் வகையில் நிபந்தனைகள் விதித்து வெளியிட்டுள்ள இந்த டெண்டருக்கு தடை விதிக்க வேண்டும், நிபந்தனைகளை தளர்த்தி, புதிய டெண்டர்களை கோர உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, 38 மாவட்டங்களுக்கு ரூ.799 கோடி மதிப்பில் சத்துமாவு கொள்முதல் செய்ய வெளியிடப்பட்ட இந்த டெண்டரில் கூறப்பட்டுள்ளது, குழந்தைகளுக்கு சத்துமாவு தடையில்லாமல் சப்ளை செய்வதை உறுதி செய்வதற்காக தான் இந்த நிபந்தனைகள் விதிக்கப்பட்டன என்று அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். இந்த வாதத்தை ஏற்று கொண்ட நீதிபதி சுரேஷ்குமார், குழந்தைகளுக்காக சத்துமாவு கொள்முதல் செய்யப்படுவதால், உணவு தரம், பாதுகாப்பு கருதி இந்த நிபந்தனைகள் அவசியம், அதனால் இந்த நிபந்தனைகள் தன்னிச்சையானது என்று கூறமுடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags : Anganwadis , Dismissal of plea seeking ban on Rs 799 crore tender for purchase of Sattuma for Anganwadis: Court order
× RELATED அங்கன்வாடி குழந்தைகள் விவரங்களை...