×

களக்காடு தலையணையில் வெள்ளம் தணிந்தது: 3 நாட்களுக்கு பின் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி

களக்காடு: களக்காடு தலையணை நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு தணிந்ததால், சுற்றுலா பயணிகள் குளிக்க 3 நாட்களுக்கு பின் இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டது. நெல்லை மாவட்டம், களக்காடு புலிகள் காப்பகத்திற்குள்பட்ட மேற்குதொடர்ச்சி மலையில் தலையணை நீர்வீழ்ச்சி உள்ளது. வனத்துறையினரால் சுற்றுசூழல் சுற்றுலா மையமாக அறிவிக்கப்பட்டுள்ள தலையணையில் ஓடும் தண்ணீர் மூலிகைகளை தழுவியபடி, அதிக குளுமையுடன் ஓடி வருவதால் அதில் குளிக்க சுற்றுலா பயணிகள் தனி ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் எதிரொலியாக களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையிலும் மழை பெய்து வருகிறது. ஊர் பகுதிகளில் லேசான மழை காணப்பட்ட போதிலும் உள்மலை பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனைதொடர்ந்து களக்காடு தலையணையில் கடந்த 5ம் தேதி முதல் தண்ணீர் வரத்து அதிகரித்தது. தடுப்பணையை மூழ்கடித்தபடி தண்ணீர் பாய்ந்தோடியது. இதையடுத்து தலையணையில் குளிக்க கடந்த 5ம் தேதி முதல் வனத்துறையினர் தடை விதித்தனர்.
 
இந்நிலையில் தண்ணீர் வரத்து குறைந்ததை அடுத்து 6 நாட்களுக்கு பின் கடந்த 11ம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதற்கிடையே மழையின் காரணமாக தலையணையில் கடந்த 16ம் தேதி முதல் காலை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடியதால் 16ம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டது. தற்போது வெள்ளம் தணிந்ததால் களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் உத்தரவின் பேரில் 3 நாட்களுக்கு பின் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படுவதாக வனசரகர் பிரபாகரன் அறிவித்துள்ளார்.

Tags : Kalakadu , Floods subside in Kalakadu pillow: Tourists allowed to bathe again after 3 days
× RELATED களக்காடு மலையில் நீரோடைகள் வறண்டு...