டெல்லியில் மாநகராட்சி தேர்தல்; ‘பாக்கெட் இன்ஜினியரிங்’ முறையில் ‘சீட்’ ஒதுக்கீடு: முன்பு ஜாதி... இப்போது மொழியை தூக்கி பிடிக்கும் பாஜக

புதுடெல்லி: டெல்லி மாநகராட்சி தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ஜாதியை தூக்கிபிடித்த பாஜக, தற்போதைய தேர்தலில் மொழியை தூக்கிபிடித்து வேட்பாளர்களை களம் இறக்கி வருகிறது. தலைநகர் ெடல்லி மாநகராட்சிக்கு உட்பட 250 வார்டுகளுக்கு டிசம்பர் 4ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 7ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

கடந்த காலங்களில் டெல்லி மாநகராட்சி தேர்தலை பொருத்தமட்டில் காங்கிரஸ் - பாஜக இடையிலான போட்டி தான் இருந்தது. ஆனால் தற்போது ஆளும் ஆம்ஆத்மி - பாஜக இடையிலான போட்டியாக மாறிவிட்டது. ஆம்ஆத்மி கட்சிக்கு எதிராக பாஜக பல்வேறு தேர்தல் வியூகங்களை செயல்படுத்தி வருகிறது. டெல்லியின் 14 மாவட்டங்களில் தமிழ்நாடு, உத்தரகாண்ட், இமாச்சல் பிரதேசம், ஒடிசா, மேற்குவங்கம், குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் வாக்காளர்கள் அதிகளவில் வசிக்கின்றனர்.

அதேபோல் வசந்த் விஹாரில் தென்னிந்தியர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. கடந்த காலங்களில் ஜாதி அடிப்படையில் வேட்பாளர்களை களமிறக்கிய பாஜக தற்போதைய மாநகராட்சி தேர்தலில் மொழி அடிப்படையில் வேட்பாளர்களை களமிறக்க திட்டமிட்டுள்ளது. இதனை டெல்லி அரசியல் வட்டாரத்தில் ‘பாக்கெட் இன்ஜினியரிங்’ முறை என்கின்றனர். உதாரணமாக, மினி பெங்கால் என்று அழைக்கப்படும் சித்தரஞ்சன் பார்க் பகுதியில், அதிகளவில் மேற்குவங்கத்தை சேர்ந்த பெங்காலி மொழி பேசும் வாக்காளர்கள் உள்ளனர்.

இதேபோல் தலைநகர் முழுவதும் மொழி வாரியாக பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மக்கள் குறிப்பிட்ட பகுதிகளில் அதிகளவில் வசிக்கின்றனர். அந்த பகுதிகளை அடையாளம் கண்டுள்ள பாஜக, அதற்கேற்றவாறு வேட்பாளர்களை களம் இறக்கி வருகிறது. இதற்காக மொழிவாரி கூட்டம், சமூக கூட்டம் என்று மண்டலங்கள் வாரியாக பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

Related Stories: