மஞ்சூர் - கோவை சாலையில் குட்டிகளுடன் உலா வந்த காட்டு யானைகள்: அரசு பஸ்சை மறித்ததால் பரபரப்பு

மஞ்சூர்: மஞ்சூர் - கோவை சாலையில் இரண்டு குட்டிகளுடன் உலா வந்த காட்டு யானைகள், அரசு பஸ்சை மறித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி  மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது கெத்தை. மஞ்சூரில் இருந்து கோவை செல்லும்  சாலையில் உள்ள இப்பகுதியில் இரண்டு குட்டிகளுடன் 5 காட்டு யானைகள்  கடந்த சில தினங்களாக நடமாடி வருகின்றன.  கெத்தை, பெரும்பள்ளம், முள்ளி ஆகிய  பகுதிகளில் உலா வரும் இந்த காட்டு யானைகள் நடுரோட்டில் நின்று கொண்டு அவ்வழியாக  சென்று வரும் அரசு பஸ்கள் மற்றும் வாகனங்களை வழிமறிப்பது வழக்கம்.

இந்நிலையில், நேற்று காலை கோவையில் இருந்து சுமார் 40 பயணிகளுடன்  அரசு பஸ் ஒன்று மஞ்சூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. பெரும்பள்ளம் கெத்தை  இடையே சென்ற போது எதிரே குட்டிகளுடன் காட்டு யானைகள் நடுரோட்டில் சாலையை  மறித்தபடி நின்று கொண்டிருந்தது.  இதைப்பார்த்ததும் டிரைவர் பஸ்சை மெதுவாக  இயக்கி சாலையோரமாக நிறுத்தினார். இதேபோல், மஞ்சூரில் இருந்து கோவைக்கு சென்ற  தனியார் வாகனங்களும் காட்டு யானைகளின் வழிமறிப்பில் சிக்கி ஓரமாக நிறுத்தப் பட்டன. இந்நிலையில் காட்டு யானைகளை கண்ட பயணிகள் ஒருவித  அச்சத்துடன் வாகனங்களுக்குள் அமர்ந்திருந்தனர்.

சுமார் ஒரு மணி  நேரத்திற்கும் மேலாக சாலையோரத்தில் வளர்ந்திருந்த செடி, கொடிகளை பிடுங்கி  சாப்பிட்டவாறு ரோட்டினை மறித்து நின்றிருந்தன. அதன்பின், குட்டிகளுடன் மெதுவாக காட்டுக்குள் இறங்கியது. அதன்பிறகே, பயணிகள் நிம்மதி  அடைந்தனர். தொடர்ந்து அரசு பஸ் மற்றும் தனியார் வாகனங்கள் அங்கிருந்து  புறப்பட்டு சென்றன. இந்த சம்பவத்தால் மஞ்சூர் - கோவை சாலையில் ஒரு மணி நேரம்  போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: