×

மஞ்சூர்-கோவை சாலையில் குட்டிகளுடன் உலா வரும் காட்டு யானைகள்: வனத்துறையினர் கண்காணிப்பு

மஞ்சூர்: மஞ்சூர்-கோவை சாலையில் குட்டிகளுடன் நடமாடும் காட்டு யானைகள் அவ்வழியாக செல்லும் வாகனங்களை வழி மறிப்பதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது கெத்தை. மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் சாலையில் உள்ள இப்பகுதியில் நீர் மின் நிலையம் மற்றும் குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் உணவு மற்றும் குடிநீர் தேடி வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து சென்றது. இதனால் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கெத்தை பகுதியில் யானைகளின் நடமாட்டம் இல்லாததால் இவ்வழியாக இயக்கப்பட்ட அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் சென்று வந்தன.

இந்நிலையில், காட்டு யானைகள் மீண்டும் கெத்தை பகுதிக்கு திரும்பியுள்ளன. கடந்த சில தினங்களாக 2 குட்டிகளுடன் 4 பெரிய காட்டு யானைகள் மந்து, கெத்தை, பெரும்பள்ளம் பகுதிகளில் நடமாடி வருகின்றன. பெரும்பாலும் சாலைகளிலேயே யானைகள் நடமாடி வருவதால் அரசு பஸ்கள் மற்றும் தனியார் வாகனங்கள் யானைகளின் வழிமறிப்பில் சிக்கி நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. குட்டிகளுடன் நடுரோட்டில் யானைகள் நடமாடுவதால் கார், வேன், இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் அச்சமடைந்து நீண்ட தொலைவிலேயே தங்களது வாகனங்களை நிறுத்தி விடுகின்றனர்.

அதே சமயம் அரசு பஸ்கள் போன்ற கனரக வாகனங்களை கண்டவுடன் காட்டு யானைகள் வழிவிடுவதைபோல் சாலையோரம் ஒதுங்கி விடுகின்றன. இதனால் கார், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கனரக வாகனங்கள் வரும் வரை தங்களது வாகனங்களை நிறுத்தி அதன்பின் தொடர்ந்து செல்கின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக காலை மற்றும் மாலை, இரவு நேரங்களில் குட்டிகளுடன் யானைகள் நீண்ட நேரம் சாலையில் முகாமிடுவதால் வாகனங்களில் செல்லும் பயணிகள் கடும் அவதியடைந்து வருகிறார்கள். மேலும் காட்டு யானைகளின் நடமாட்டத்தால் நீண்ட நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது.

இந்நிலையில், குந்தா ரேஞ்சர் சீனிவாசன் தலைமையில் வனவர் பிச்சை, வனக்காப்பாளர் கண்ணன் மற்றும் வனப்பணியாளர்கள் மஞ்சூர்-கோவை சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள மந்து, கெத்தை, பெரும்பள்ளம் பகுதிகளில் தீவிர ரோந்து மற்றும் யானைகள் நடமாட்டம் குறித்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், இவ்வழியாக வாகனங்களில் செல்பவர்கள் சாலைகளில் காட்டு யானைகளை கண்டவுடன் வாகனங்களை பாதுகாப்பான இடத்தில் நிறுத்த வேண்டும்.பயணிகள் கீழே இறங்கி யானைகளை கண்டு கூச்சலிடுவது மற்றும் புகைப்படம் எடுக்க முயற்சி செய்யக்கூடாது. வாகனங்கள் மூலம் யானைகளை பின் தொடர்தல், அவற்றை விரட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. காட்டு யானைகள் சாலையில் இருந்து வனப்பகுதிக்குள் சென்றதை உறுதி செய்த பின்னரே வாகனங்களை இயக்க வேண்டும் என வாகன ஓட்டுனர் மற்றும் பயணிகளுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

The post மஞ்சூர்-கோவை சாலையில் குட்டிகளுடன் உலா வரும் காட்டு யானைகள்: வனத்துறையினர் கண்காணிப்பு appeared first on Dinakaran.

Tags : Manjoor-Coimbatore ,Manjoor ,
× RELATED மஞ்சூரில் பணிமனையுடன் பேருந்து நிலையம் அமைக்க கோரிக்கை