×

நிதின் கட்கரி தகவல் சுங்கச்சாவடி கட்டணத்தை 40% வரை குறைக்க திட்டம்

புதுடெல்லி: சுங்கச்சாவடி கட்டணத்தை 40 சதவீதம் வரை குறைக்க ஒன்றிய அரசு முடிவு செய்திருப்பதாக ஒன்றிய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தகவல் தெரிவித்துள்ளார். நாடு மழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு, அதற்கு பதிலாக வாகனப் பதிவின் போதே ஒருமுறை சிறிய அளவிலான கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தி மாநிலங்களவையில் திமுக எம்பி பி.வில்சன் கோரிக்கை விடுத்திருந்தார். இதுதொடர்பாக, ஒன்றிய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி அளித்துள்ள பதில் கடிதத்தை எம்பி பி.வில்சன் நேற்று தனது டிவிட்டரில் பதிவிட்டார்.

அமைச்சர் நிதின் கட்கரி தனது பதில் கடிதத்தில், ‘‘நாட்டின் பல பகுதிகளில் 60 கிமீ தொலைவுக்குள் சுங்கச்சாவடிகள் அமைந்துள்ளதை அறிவேன். சில மேம்பட்ட தொழில்நுட்ப தீர்வுகளைப் பயன்படுத்தி இந்த சிக்கலை தீர்க்க முடிவு செய்துள்ளோம். பயணித்த தூரத்தின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கும் அத்தகைய தொழில்நுட்பம் மூலம், சுங்கச்சாவடிகளுக்கு இடையேயான தூரப் பிரச்னை தீரும். சோதனை முயற்சியைத் தொடர்ந்து, இந்த நடைமுறை அமல்படுத்தப்படும். அதே போல, சுங்கச்சாவடி கட்டணம் ஆண்டுதோறும் திருத்தி அமைக்கப்படும். அதன்படி, பொது நிதி உதவித்திட்டத்தில் சுங்கச்சாவடி கட்டணங்களை 40 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என தெரிவித்துள்ளார். சாலைப்பயனாளர்களின் சுமையை குறைக்க உதவிடும் இந்த முடிவிற்காக அமைச்சர் நிதின் கட்கரிக்கு எம்பி வில்சன் நன்றி தெரிவித்துள்ளார்.

Tags : Nidin Katkari , Nitin Gadkari Information Plan to reduce toll fees by up to 40%
× RELATED மோடியே மீண்டும் பிரதமராவார்: நிதின் கட்கரி