×

மியான்மரில் சிக்கி தவித்த 22 தமிழக இளைஞர்கள் மீட்பு: விமான நிலையத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்பு..!!

சென்னை: மியான்மரில் சிக்கி தவித்த தமிழக இளைஞர்கள் 22 பேர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சியால் இந்திய தூதரகத்தின் உதவியோடு மீட்கப்பட்டு இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். தாய்லாந்தில் தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த இளைஞர்கள் சிலரை ஒரு ஏஜென்ட் கும்பல் அழைத்து சென்றது. ஆனால் அவர்களை தாய்லாந்து அழைத்து செல்லாமல் மியான்மர் நாட்டின் மியாவாடி என்ற இடத்தில் அடைத்து வைத்த கும்பல், ஒரு நாளைக்கு 17 மணி நேரம் வேலை வாங்கியதுடன், சட்டவிரோத பணிகளில் ஈடுபடுத்துவதாக அதிர்ச்சி வீடியோ வெளியானது.

தங்களை மீட்குமாறு பாதிக்கப்பட்ட இளைஞர்கள் வீடியோ மூலம் தமிழ்நாடு முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து முதலமைச்சரின் முயற்சியால் இந்திய தூதரகத்தின் உதவியுடன் ஏற்கனவே 42 பேர் மீட்கப்பட்டனர். இன்று மேலும் 22 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தனர். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய இளைஞர்கள், தங்களை மீட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர். இதனிடையே மீட்கப்பட்ட இளைஞர்களை நேரில் சென்று சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார். பின்னர் அங்கு செய்தியர்களை சந்தித்த அமைச்சர், ஏஜென்ட்டுகள் மோசடி செய்து ஏமாற்றுவது தெரியவந்தால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

ஏற்கனவே திருச்சியில் டிராவல் ஏஜென்ட்டுகள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் வெளிநாடு வேலைவாய்ப்புகளை நாடி செல்வோர் விழிப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் வேண்டுகோள் விடுத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் வெளிநாட்டினர் பிரச்சனைகள் தனித்துறையால் கையாளப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

Tags : Tamil Nadu ,Myanmar ,Minister ,Senji Mastan , Myanmar, Tamil Youth, Airport, Minister Mustan
× RELATED கோடை விடுமுறைக்கு பின்...