×

குண்டர்களை வைத்து தொண்டர்களை தாக்கிய கே.எஸ்.அழகிரியை கட்சி தலைமை மன்னிக்காது: ரூபி மனோகரன் எம்எல்ஏ பரபரப்பு பேட்டி

சென்னை: சத்தியமூர்த்தி பவனில் தொண்டர்களை குண்டர்களை வைத்து, உருட்டுக் கட்டைகளால் ஓட ஓட விரட்டித் தாக்கிக்  காயப்படுத்திய தலைவர் கே.எஸ்.அழகிரியை கட்சி தலைமை மன்னிக்காது என தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி எம்எல்ஏவுமான ரூபி மனோகரன் தெரிவித்துள்ளார்.

சத்தியமூர்த்தி பவனில் நடந்த சம்பவம் குறித்து ரூபி மனோகரன் எம்எல்ஏ அளித்த விளக்கம்: சென்னை சத்தியமூர்த்தி பவனில் கடந்த 15ம் தேதி   நாங்குநேரி சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள், சத்தியமூர்த்தி பவன் வளாகத்திற்கு உள்ளேயே குண்டர்களால் திட்டமிட்டு தாக்கப்பட்டுள்ளனர். கட்சிக்காக உழைக்காமல் சுயநலத்தோடு செயல்படும் கிழக்கு மாவட்ட தலைவர்  கே.பி.கே. ஜெயக்குமாரை பதவியில் இருந்து நீக்கிவிட்டு, கட்சிக்காக பாடுபடும் ஒருவரை மாவட்டத் தலைவராக நியமிக்க வேண்டும்.

அதேபோல், வட்டாரத் தலைவர் பதவிகளுக்கும் கட்சிக்காக உழைத்தவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்ற, தங்களது நியாயமான கோரிக்கைகளை உரிமையை முறையிட வந்த அந்தத் தொண்டர்களையும், நிர்வாகிகளையும் குண்டர்களை வைத்து, உருட்டுக் கட்டைகளால் ஓட ஓட விரட்டித் தாக்கிக் காயப்படுத்திய தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்களின் செயலை யாரும் நியாயப்படுத்திவிட முடியாது. கட்சியை வளர்க்க ரத்தம் சிந்திய தொண்டனை, கட்சித் தலைமையே உருட்டுக்கட்டையால் தாக்கி, ரத்தம் சிந்த வைத்ததை, மவுனத்தை விலக்கிக் கண்டிக்க வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால், நெல்லை கிழக்கு மாவட்டத் தொண்டர்களை நான்தான் அழைத்து வந்தேன், போராட்டம் செய்யத் தூண்டினேன் என்பது எல்லாம், அப்பட்டமான பொய்.

என் மீது களங்கம் கற்பிக்கும் நோக்கத்துடன் சிலர் செயல்படுகிறார்கள் என்பதை நான் நன்கு அறிவேன். கண்ணியமிக்க சத்தியமூர்த்தி பவனில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தொண்டர்கள் தாக்கப்பட்ட அன்று, தலைவர் கே.எஸ்.அழகிரியின் ஆதரவு பெற்ற குண்டர்கள் என்னையும் தாக்க திட்டமிட்டு இருந்தார்கள். இதையும் வெளிப்படையாக சொல்ல வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டுள்ளது. உண்மைகளை எல்லாம் மறைத்துவிட்டு, என்னை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்ய தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார் தலைவர் கே.எஸ்.அழகிரி. சம்பவம் நிகழ்ந்த அன்று நிஜமாகவே என்ன நடந்தது என்பது ஒரு சில மாவட்டத் தலைவர்களுக்கு மட்டுமே தெரியும். ஆனால், வேண்டும் என்றே, பழி வாங்கும் நோக்கத்துடன் எல்லா மாவட்ட தலைவர்களிடமும் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கி, காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவிடம் அந்தக் கடிதத்தை வழங்கி இருக்கின்றனர்.

இதன்மூலம், தமிழக காங்கிரஸ் என்னுடைய முழு கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்று சொல்லாமல் சொல்லி, ‘என்னை யாராலும் ஒன்றும் செய்துவிட முடியாது’ என்று, அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கும் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார் கே.எஸ்.அழகிரி. அவரது செயல்பாடுகளால் தமிழக காங்கிரஸ் கட்சிக்கே அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. நியாயத்தைக் கேட்டு முறையிட வந்த கட்சித் தொண்டர்களை கைநீட்டி அடிக்கும் இவரை, உண்மை காங்கிரஸ் தொண்டர்களும், நிர்வாகிகளும் மன்னிக்க மாட்டார்கள். அகில இந்திய காங்கிரஸ் தலைமையும் அவரை மன்னிக்காது. தொண்டர்களின் நியாயமான கோரிக்கைகளையும், தலைவர் கே.எஸ்.அழகிரியின் பழிவாங்கும் போக்கையும் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிடமும், சோனியாகாந்தி, இளம் தலைவர் ராகுல்காந்தியிடமும் நிச்சயமாகத் தெரிவிப்பேன். தர்மமும், நியாயமும் ஒருநாள் வென்றே தீரும். இவ்வாறு   ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

Tags : KS Azhagiri ,Ruby Manokaran ,MLA , Party leadership will not forgive KS Azhagiri who attacked volunteers with thugs: Ruby Manokaran MLA sensational interview
× RELATED தேர்தல் பிரசாரம் செய்ய போய் உளறியதால்...