புதுகையில் பயங்கரம்; கோயில்களில் திருடியதாக கூறி சிறுமி அடித்து கொலை: தாய், தந்தை உள்பட 5 பேர் காயம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அருகே கிள்ளனூர் பகுதியில் கடந்த 14ம் தேதி சாலையோரத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் பொருட்களை திருடிக் கொண்டு ஒரு கும்பல் ஆட்டோவில் தப்பி செல்வதாக கருதி அப்பகுதி இளைஞர்கள், ஊர் மக்கள் சுமார் 20 பேர் இரு சக்கர வாகனங்களில் ஆட்டோவை சுமார் 25 கி.மீ தொலைவுக்கு விரட்டி வந்து, கணேஷ்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மச்சுவாடி ஜீவா நகரில் ஆட்டோவை மறித்து, அதில் இருந்தவர்களை கட்டைகளால் சரமாரி தாக்கினர். இதில் ஆட்டோவில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் 6 பேரையும் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணையில் அவர்கள் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தைச் சேர்ந்த சத்திய நாராயணசாமி (48), இவரது மனைவி லில்லி புஷ்பா(38) மற்றும் இவர்களது மகன்கள் விக்னேஷ்வரசாமி(19), சுபமெய்யசாமி(19), மகள்கள் கற்பகாம்பிகா(10), ஆதிலட்சுமி(8) என தெரிய வந்தது. இவர்களில் தலையில் படுகாயமடைந்த கற்பகாம்பிகா சிகிச்சை பலனின்றி நேற்று மாலை இறந்தார்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரையும் அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியதாக கணேஷ் நகர் போலீசார் ஏற்கனவே வழக்கு பதிவு செய்திருந்தனர்.

தற்போது அந்த வழக்கை கொலை வழக்காக மாற்ற போலீசார் முடிவு செய்துள்ளனர். மகள் இறந்தது குறித்து லில்லி புஷ்பா, கணேஷ் நகர் போலீசில் அளித்த புகார் மனு: நானும் எனது கணவரும் குடும்பத்தோடு பெருமாள் கோயில்களில் தரிசனம் செய்வதற்காக ஆட்டோவில் புறப்பட்டு வந்தோம். சம்பவத்தன்று கிள்ளனூர் பகுதியில் கோயிலுக்கு செல்ல எனது கணவர் வழி கேட்டபோது நான் கழிவறை பக்கம் சென்று இருந்தேன். அப்போது அங்கு இருந்த 2 பேர் என்னிடம் தகராறில் ஈடுபட்டனர். இதனை கண்ட எனது கணவர் மற்றும் மகன்கள் வந்து தட்டி கேட்டனர். அப்போது அங்கு இருந்தவர்கள் எங்களை தாக்கினர். பின்னர் நாங்கள் ஆட்டோவில் புதுக்கோட்டை நோக்கி வந்தபோது வழி மறித்து கம்புகள், கற்களால் தாக்கினர். இதில் நாங்கள் காயம் அடைந்தோம். எங்கள் மீது கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார். இதனால் இவர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களா அல்லது கோயில்களில் தரிசனம் செய்ய வந்தவர்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: