×

சென்னை புறநகர் பகுதிகளில் வேகமாக பரவுகிறது மெட்ராஸ் ஐ

சென்னை: விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்று தான் மெட்ராஸ் ஐ கண்நோய் ஆகும். இது காற்று மூலமாகவும், மாசு வாயிலாகவும் பரவக் கூடியது. மெட்ராஸ் ஐ கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்களை உபயோகப்படுத்தினால் மற்றவர்களுக்கு அந்த நோய் தொற்று பரவும் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். கண் எரிச்சல், விழிப்பகுதி சிவந்து காணப்படுதல், நீர் சுரந்து கொண்டே இருத்தல், கண்ணில் இருந்து அழுக்கு வெளியேறி இமைப்பகுதி ஒட்டிக் கொள்ளுதல், வெளிச்சத்தை பார்க்கும் போது கண் கூசுதல் உள்ளிட்டவை மெட்ராஸ் ஐ-யின் அறிகுறிகள் ஆகும். பொதுவாக ஒரு கண்ணில் மெட்ராஸ் ஐ கண்நோய் ஏற்பட்டால் மற்றொரு கண்ணிலும் அந்த பாதிப்பு வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

மெட்ராஸ் ஐ பாதிப்பு பெற்றவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கு கடந்த வாரம் வரை தினமும் சுமார் 5 பேர் மெட்ராஸ் ஐ கண்நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால் தற்போது தினமும் சராசரியாக 50 நோயாளிகள் வருகிறார்கள். அதே நேரத்தில் தனியார் மருத்துவமனைக்கு தினமும் 100க்கும் அதிகமான நோயாளிகள் வருகிறார்கள். இது தொடர்பாக சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனை இயக்குனர் பிரகாஷ் கூறியதாவது: எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் மெட்ராஸ் ஐ கண் நோயால் பாதிக்கப்பட்டு தினமும் 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வருகின்றனர்.

அவர்களுக்கு எளிய சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. அனைத்து மருந்துகளும் போதிய அளவில் கையிருப்பில் உள்ளன. எனவே தட்டுப்பாடு என்ற நிலை ஏற்படவில்லை. மெட்ராஸ் ஐ தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் பயன்படுத்திய துணி, சோப்பு உள்ளிட்டவற்றை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது. இது மற்றவர்களுக்கு எளிதில் பரவும் தன்மை கொண்டது. மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக கண் டாக்டரிடம் சிகிச்சை பெற வேண்டும். இது 5 நாட்களில் குணமாகக்கூடியது தான். அதே நோரத்தில் அலட்சியப்படுத்தினால் பார்வை இழப்பு கூட நேரிடும்.

எனவே அலட்சியம் காட்டாமல் கண் டாக்டரிடம் சிகிச்சை பெறுவது நல்லது. மேலும் மருந்துகளை சுயமாக வாங்கி அவற்றை பயன்படுத்துவது கண்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். எனவே இலவசமாக சிகிச்சை கிடைக்க கூடிய எழும்பூர் கண் மருத்துவமனையை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் கைகளை அடிக்கடி கழுவி சுத்தம் செய்தல், கண்கள் அருகே கைகளை கொண்டு செல்லாமல் இருக்கும் பட்சத்தில் மெட்ராஸ் ஐ தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் ‘மெட்ராஸ் ஐ’கண் நோய் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது தொடர்பாக டாக்டர்கள் கூறியதாவது: ‘மெட்ராஸ் ஐ’ தொற்று தலையணை உறை, ஒப்பனை பொருட்கள், டவல் போன்ற தனிப்பட்ட பொருட்களின் வழியாகக் தான் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுகிறது. இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் கண்களில் இருந்து வெளியேறும் நீரை துடைக்க பேப்பர் நாப்கின்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
தொற்று ஏற்படும் போது பயன்படுத்திய கான்டாக்ட் லென்சுகளை பயன்படுத்தக் கூடாது. டாக்டர்கள் பரிந்துரைப்படி புதிய கான்டாக்ட் லென்சுகளை மட்டுமே அணிய வேண்டும். ‘மெட்ராஸ் ஐ’ கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கைகளை அடிக்கடி கழுவி சுத்தம் செய்ய வேண்டும். தங்களது தனிப்பட்ட பயன்பாட்டு பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது.

பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் போன்ற இடங்களில் மெட்ராஸ் ஐ வேகமாக பரவும் என்பதால் கண்களில் இருந்து வெளியேறும் நீர் போன்ற திரவ சுரப்பு முற்றிலும் நிற்கும் வரை வெளியே செல்வதை தவிர்த்து வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags : Metras IC ,Chennai , Madras Eye is spreading rapidly in the suburbs of Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...