×

பாலி உச்சி மாநாடு நிறைவடைந்தது இந்தியாவுக்கு ஜி20 தலைவர் பதவி: மோடியிடம் ஒப்படைத்தார் இந்தோனேஷிய அதிபர்

பாலி: இந்தோனேஷியாவின் பாலியில் 2 நாட்கள் நடந்த ஜி20 உச்சி மாநாடு, நேற்றுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டிற்கான ஜி20 தலைவர் பதவி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் இணைந்த ஜி20 அமைப்பின் 17வது உச்சி மாநாடு, இந்தோனேஷியாவின் பாலி தீவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இம்மாநாட்டில் உலக தலைவர்களுடன் பிரதமர் மோடி பங்கேற்று, உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் பரிமாற்றம், சுகாதாரம் ஆகிய 3 தலைப்புகளில் நடந்த விவாதத்தில் பங்கேற்று பேசினார். அப்போது, பல சர்வதேசப் பிரச்னைகளை தீர்ப்பதில் ஐநா உள்ளிட்ட அமைப்புகள் தோல்வி அடைந்ததை அவர் உலக நாடுகளுக்கு சுட்டிக் காட்டினார்.

இந்நிலையில், மாநாட்டின் 2வது மற்றும் நிறைவு நாளான நேற்று அடுத்த ஆண்டிற்கான ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை ஒவ்வொரு ஆண்டும் ஒரு உறுப்பு நாடுகள் ஏற்றுக் கொள்ளும். அதன்படி, அடுத்த தலைவர் பொறுப்பை இந்தியா ஏற்கிறது. தற்போது தலைமை ஏற்றுள்ள இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோ, பிரதமர் மோடியிடம் ஜி20 தலைவர் பதவியை ஒப்படைத்தார். தலைமை பதவியை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி, ‘‘உலகம் ஒரே நேரத்தில் அரசியல் பதற்றங்கள், பொருளாதார மந்தநிலை, உணவு மற்றும் எரிபொருள் விலை உயர்வு மற்றும் தொற்றுநோயின் நீண்டகால எதிர்மறை விளைவுகள் ஆகியவற்றுடன் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தியா ஜி20 தலைமை பொறுப்பை ஏற்கிறது.

இத்தகைய கடினமான நேரத்தில், உலகம் ஜி20 அமைப்பை நம்பிக்கையுடன் பார்க்கிறது. எனவே, இந்தியாவின் ஜி20 தலைவர் பதவி அனைவரையும் உள்ளடக்கியதாகவும், லட்சியமாகவும், தீர்க்கமாகவும், செயல் சார்ந்ததாகவும் இருக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன். இது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கும் விஷயம். ஒவ்வொரு நாடுகளின் முயற்சிகளுடன் இணைந்து, ஜி20 மாநாட்டை உலக நலனுக்காக வழிநடத்துவோம்,’’ என்றார். வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா அதிகாரப்பூர்வமாக ஏற்கும். இந்தியாவில் அடுத்த ஆண்டு செப்டம்பர் 9-10ம் தேதிகளில் இதன் முதல் உச்சி மாநாடு நடக்கும். அதுதவிர, அடுத்த ஓராண்டில் இந்தியாவில் 200 ஜி20 கூட்டங்களை நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.


Tags : Bali ,G20 ,India ,Modi , Bali summit ends; G20 presidency to India: Indonesian president hands over to Modi
× RELATED சாலையில் மயங்கி கிடந்தவர் பலி