×

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா விவகாரம்: மருத்துவ குழுவின் அறிக்கையின்படி போலீஸ் அடுத்த கட்ட நடவடிக்கை

பெரம்பூர்: கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா உயிரிழப்பு சம்பந்தமாக மருத்துவ குழுவினர் தருகின்ற அறிக்கையின்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம்  எம்எம். கார்டன் பகுதியை சேர்ந்த தம்பதி ரவி, உஷா. இவர்களது மகள் பிரியா (17). சென்னை ராணி மேரி கல்லூரியில் முதலாமாண்டு படித்துவந்த இவர், கால்பந்தாட்ட வீராங்கனையாக இருந்தார். கடந்த 3 மாதத்துக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்றபோது பிரியாவுக்கு முழங்காலில் வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கடந்த அக்டோபர் 28ம் தேதி கொளத்தூர் பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்களின் கொடுத்த பரிந்துரையின்படி, பிரியாவுக்கு டாக்டர்கள் சோமசுந்தரம், பால் ராம்சங்கர் ஆகியோர் மூலம் மூட்டு ஜவ்வு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த அறுவை சிகிச்சைக்கு பின் மாணவி பிரியாவின் உடல்நிலை மோசம் அடைந்தது.

இதையடுத்து, கடந்த 8ம் தேதி மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. அப்போது பிரியாவுக்கு காலில் ரத்த ஓட்ட பாதிப்பு ஏற்பட்டதால் அவரது முழங்கால் பகுதி வரை அகற்றப்பட்டது. இதன்பிறகு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், நேற்றுமுன்தினம்  பிரியாவின் உடல்நலம் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமானதால் உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று காலை கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு நேற்று மாலை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. தவறான சிகிச்சை அளித்ததால்தான் பிரியா இறந்துவிட்டார் என்று பெற்றோரும் உறவினர்களும் குற்றச்சாட்டினர். இந்த நிலையில், இதுசம்பந்தமாக பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனை டாக்டர்கள் சோமசுந்தரம், பால் ராம்சங்கர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

இதனிடையே பிரியா மரணம் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ள மருத்துவர் குழு அமைக்கப்பட்டு அவரது சாவுக்கான காரணம் மற்றும் தவறான  சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் அதன்  விவரங்கள் தொடர்பாக மருத்துவ அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பெரவள்ளூர் காவல் நிலையத்தில், இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பணியிடை நீக்கம் தொடர்பான நகல் வழங்க மருத்துவர்களை அணுகியபோது அவர்கள் தலைமறைவாகிவிட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில், மருத்துவர்கள் சோமசுந்தரம், பால் ராம்சங்கர் ஆகியோரின் இருப்பிடம், குடும்ப விவரங்கள் தொடர்பாக போலீசார் தகவல்களை தீவிரமாக சேகரித்து வருகின்றனர். மருத்துவ குழுவினர் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மருத்துவர்கள் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Briya , Football player Priya case: Police next step according to medical panel's report
× RELATED சென்னை திரு.வி.க.நகர் மண்டலம்,...