×

சீவலப்பேரி தொழிலாளி கொலை: 5 நாட்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது; சபாநாயகர் அப்பாவு பேச்சுவார்தையில் உடன்பாடு

நெல்லை: நெல்லை சீவலப்பேரியில் கொலை செய்யப்பட்ட தொழிலாளி உடலை வாங்க மறுத்து 5வது நாளான நேற்றும் போராட்டம் ெதாடர்ந்த நிலையில் சபாநாயகர் அப்பாவு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், உடலை இன்று வாங்க உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். நெல்லை, பாளையங்கோட்டை அருகேயுள்ள சீவலப்பேரியை சேர்ந்த தொழிலாளி மாயாண்டி (39) கடந்த 10ம்தேதி இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து சீவலப்பேரி போலீசார் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், கடந்தாண்டு ஏப்.18ம் தேதி சீவலப்பேரி சுடலை மாடன் கோயில் பூசாரி துரை என்ற சிதம்பரத்தின் கொலை சம்பவம் தொடர்ச்சியாக மாயாண்டி படுகொலை செய்யப்பட்டது ெதரிய வந்தது. இந்த ெகாலை வழக்கில் வலதி என்ற சண்முகம் (18), வல்லநாட்டைச் சேர்ந்த தம்பான், பிரபா என்ற பிரபாகரன், பல்லிக்கோட்டை மாடசாமி (24), சுபாஷ், வசவப்பபுரம் மதன் என்ற மாயாண்டி, இசக்கிபாண்டி, சீவலப்பேரியைச் சேர்ந்த முத்துராஜ், கொக்கிகுமார் என்ற வெயிலுகுமார், மாசானமுத்து (18) மற்றும் 3 சிறுவர்கள் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் கொலையான மாயாண்டியின் குடும்பத்திற்கு அரசு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வலியுறுத்தி நேற்று முன்தினம் 4வது நாளாக உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் கொலையான மாயாண்டி மனைவி நம்பி நாச்சியார் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட 10 பேர் பங்கேற்றனர். அப்போது தற்காலிகமாக மாநகராட்சி அல்லது அரசு மருத்துவமனையில் வேலை வழங்கப்படும். அங்கன்வாடி பணியிடங்கள் அறிவிக்கப்படும் போது, முன்னுரிமை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதனை ஏற்க உறவினர்கள் மறுத்து விட்டதால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

 தொடர்ந்து 5வது நாளான நேற்றும் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடந்தது. கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டதால் பாளை. தெற்கு பஜாரிலுள்ள அழகுமுத்துகோன் சிலை முன்பாக நேற்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். இதனால் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார், துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன், தலைமையிடத்து துணை கமிஷனர் அனிதா ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார், அழகுமுத்துக்கோன் சிலை முன்பாக குவிக்கப்பட்டனர்.

இதனால் தடுப்பு வேலிகள் அமைத்து போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது. இருப்பினும் அப்பகுதியில் தடையை மீறி போராட்டம் நடத்த வந்த 6 பேரை போலீசார் வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர். இதைத்தொடர்ந்து பாளை கோபாலசுவாமி கோயில் அருகே திரண்ட நூற்றுக்கணக்கானோர் அழகுமுத்து கோன் சிலை நோக்கி ஊர்வலமாக வந்தனர். அவர்களை நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் சமரசப்படுத்தினார். இதையடுத்து போராட்டக்குழுவினர் கலைந்து சென்றனர். ஆனால், பாளை தெற்கு பஜாரில் உள்ள கடைகள் அனைத்தும் திடீரென அடைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 இதனிடையே கொலையான மாயாண்டியின் உறவினர்கள் மற்றும் சமுதாய தலைவர்களுடன் வண்ணார்பேட்டை சுற்றுலா மாளிகையில் சபாநாயகர் அப்பாவு, நேற்று பிற்பகல் 2 மணிக்கு சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 1 மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. அதாவது, கடந்தாண்டு கொலையான பூசாரி துரை என்ற சிதம்பரம் மற்றும் அண்மையில் கொலை செய்யப்பட்ட மாயாண்டி ஆகியோரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு அரசு வேலை மற்றும் உரிய நிவாரணம், சட்டப்பூர்வ பாதுகாப்பு வழங்கப்படும் என சபாநாயகர் அப்பாவு உறுதியளித்தார். இதையடுத்து  மாயாண்டியின் உடலை இன்று (16ம் தேதி) பெற்றுக் கொள்ள உறவினர்கள் மற்றும் சமுதாய தலைவர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதனால் 5 நாட்களாக நடந்து வந்த போராட்டம் நேற்று மாலை முடிவுக்கு வந்தது.

அமைச்சர் சார்பில் ரூ.5 லட்சம் நிவாரண உதவி
பேச்சுவார்த்தைக்கு பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தமிழக பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் சார்பில் ரூ.5 லட்சம் நிவாரண உதவியை தமிழக சபாநாயகர் அப்பாவு வழங்கினார். இதனிடையே நேற்று காலை பாளையில் போராட்டம் நடத்த வந்த போது போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்ட 6 பேரும் சபாநாயகர் அப்பாவு மேற்கொண்ட நடவடிக்கையால் விடுவிக்கப்பட்டனர்.

கல்வி தகுதிக்கேற்ப அரசு வேலை
பின்னர் சபாநாயகர் அப்பாவு கூறுகையில் ‘‘பாளையில் கொலை  செய்யப்பட்ட பூசாரி துரை என்ற சிதம்பரம் மற்றும் மாயாண்டி ஆகிய இரு  குடும்பத்தினருக்கும் அரசு வேலை வழங்குவது தொடர்பாக முதல்வர் மு.க.  ஸ்டாலினிடம் தெரிவித்து குடும்பத்தினர் கல்வித் தகுதிக்கேற்ப சத்துணவுப்  பணியாளர் அல்லது கிராம உதவியாளர் அல்லது ரேஷன் கடை பணியாளர் வேலை வழங்க  தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான கல்விச்சான்றுகளை நெல்லை  கலெக்டர் விஷ்ணுவிடம் உறவினர்கள் ஒப்படைக்க வேண்டும்’’ என்றார்.

முழு திருப்தி
சபாநாயகர்  அப்பாவு தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் தமிழ்நாடு யாதவர் மகாசபை  மாநில இளைஞரணி பொதுச்செயலாளர் பொட்டல் துரை, மாவட்டச் செயலாளர் வள்ளிநாயகம்  மற்றும் கொலையான மாயாண்டியின் உறவினர் ஆறுமுகம் உள்ளிட்ட  பிரதிநிதிகள் பங்கேற்றனர். பின்னர் பொட்டல் துரை செய்தியாளர்களிடம்  கூறுகையில் ‘‘சபாநாயகர் அப்பாவுடன் நடந்த பேச்சுவார்த்தை எங்களுக்கு முழு  திருப்தி அளிக்கிறது.

கொலையான பூசாரி துரை என்ற சிதம்பரம் மற்றும் மாயாண்டி  ஆகியோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை தருவதாக உறுதியளித்ததை நம்பி இந்த  போராட்டத்தை திரும்பப் பெறுகிறோம். மேலும் இரு குடும்பத்தினருக்கும் இலவச  வீட்டுமனைப்பட்டா, அமைச்சர் ராஜகண்ணப்பன் மூலம் ரூ.5 லட்சம் நிதியுதவி  வழங்கியதையும் வரவேற்கிறோம். மேலும் சீவலப்பேரி சுடலையாண்டவர் கோயில்  இடத்தை முறையாக அளந்து வேலி அமைத்து தருவதாக வருவாய்த்துறையினர்  உறுதியளித்துள்ளதையும் வரவேற்கிறோம். கொலையான மாயாண்டியின் உடலை இன்று  (16ம் தேதி) பெற்றுக்கொண்டு அடக்கம் செய்ய உள்ளோம்’’ என்றார்.

Tags : Chevalaperi ,Speaker ,Dadu , Sivalapperi worker killed, 5 days protest, Speaker's father
× RELATED ராகுல், ஓம்பிர்லா தொகுதிகளில் இன்று...