இன்ஸ்டாகிராம் நட்பால் விபரீதம் பிளஸ்1 மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம்: கல்லூரி மாணவன் போக்சோவில் கைது

பூந்தமல்லி: மதுரவாயலில் பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த கல்லூரி மாணவனை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.சென்னை மதுரவாயல் சத்தியமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி அமைந்தகரையில் உள்ள அரசுப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா சமயத்தில் ஆன்லைன் வகுப்பிற்காக ஸ்மார்ட் போன் ஒன்றை இவரது பெற்றோர் வாங்கித் தந்துள்ளனர். அந்த போனில் வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் ஆப் போன்றவற்றை மாணவி வைத்துள்ளார்.

இந்நிலையில், இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த ஆண்டு பூந்தமல்லியை அடுத்த குத்தம்பாக்கம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவரான ஜார்ஜ் (19) என்பவருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த மாணவியை காதலிப்பதாக ஜார்ஜ் கூறியுள்ளார். இதையடுத்து இருவரும் நெருங்கி பழகியுள்ளனர். இதையடுத்து, மாணவி தனியாக வீட்டில் இருந்தபோது அங்கு வந்த ஜார்ஜ், காதலிப்பதாக  ஆசைவார்த்தை கூறி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், அதை வெளியே சொல்லி விடுவேன் என்று மிரட்டி,  பலமுறை அந்த மாணவியை பலாத்காரம் செய்துள்ளார். இதுபோல, மாணவியை மிரட்டி அடிக்கடி பணம் வாங்கி, உல்லாசமாக செலவு செய்து வந்துள்ளார்.

இதுகுறித்து, அந்த மாணவியின் தாயாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். வழக்குப் பதிவு செய்த மகளிர் போலீசார் ஜார்ஜ் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில்,  ஜார்ஜ் அந்த மாணவியிடம் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறியும், மிரட்டியும் பலமுறை பலாத்காரம் செய்ததுடன் பணம் பறித்ததும் தெரியவந்தது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரி கட்டணம் செலுத்துவதற்காக மாணவியிடம் ரூ. 15 ஆயிரம் கேட்டு மிரட்டியுள்ளார். அப்போதுதான் அந்த மாணவி தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த  3 நாட்களுக்கு முன்பு மாணவியின் வீட்டுக்கு வந்த ஜார்ஜ், அந்த மாணவியின் தாயார் கண் முன்னே மாணவியிடம் தகாத முறையில் நடந்துள்ளார். இதில், ஆத்திரமடைந்த தாயார் கல்லூரி மாணவனை தட்டிக் கேட்டுள்ளார். இதையடுத்து அவரையும் மிரட்டி விட்டு தப்பிச் சென்றதும் தெரியவந்தது.இதையடுத்து, அவர் மீது போக்சோ சட்டம் மற்றும் மிரட்டல் விடுத்தது ஆகிய பிரிவுகளில் மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். பின்னர், அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பூழல் சிறையில் அடைத்தனர். மேலும், இதுபோல ஜார்ஜ் வேறு பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்து பணம் பறித்துள்ளாரா என்பது குறித்தும் மகளிர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: