×

மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பை சீர்செய்தால் போதாது சிகிச்சை முறை நவீனமயமாக இருக்க வேண்டும்: சுகாதார மாநாட்டை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பை சீர்செய்தால் மட்டும் போதாது நோயாளிக்கு அளிக்கும் மருத்துவம், சிகிச்சை முறைகள் நவீனமயமாக இருக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சுகாதார மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் சுகாதார மாநாடு-2022-ஐ முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது: அனைத்து துறைகளும் வளர்ச்சியடைகின்ற ஒருங்கிணைந்த வளர்ச்சியை தமிழ்நாடு பெற வேண்டும் என்பதற்காக நாம் பல்வேறு திட்டங்களை திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறோம். அதில் நமது கவனத்தை பெற்றிருக்கக்கூடிய முதன்மையான துறை எது என்று சொன்னால், அது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைதான்.

கல்வியும் - மருத்துவமும் இந்த அரசினுடைய இரு கண்கள் என்று நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். இத்துறை மகத்தான வகையில் செயல்பட அமைச்சர் மா.சுப்பிரமணியன், மற்றும் அதிகாரிகளையும், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவ பணியாளர்களையும் நான் பாராட்டுகிறேன். ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்ட மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகள், அரசு மருத்துவ கல்லூரிகளோடு இணைந்த மருத்துவமனைகள் ஆகியவற்றின் செயல்பாடுகளைச் சீரமைப்பதற்கான முதல் மாநாடாக இந்த மாநாட்டை கூட்டியிருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இந்த அரசின் நோக்கத்தை முழுமைப்படுத்த இந்த மாநாடு உதவிகரமாக இருக்கும்.

ஊரக பகுதிகளில், குக்கிராமத்தில் வசிக்கக்கூடிய ஏழை எளிய மக்களின் நோயையும் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து, அவர்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை இலவசமாகவும் உடனடியாகவும் கிடைக்க வேண்டும் என்பதே நமது அரசினுடைய குறிக்கோள். கலைஞர் ஏழை எளிய மக்களுக்காக கண்ணொளி காப்போம் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம், வருமுன் காப்போம் திட்டம், கலைஞர் காப்பீட்டு திட்டம், 108 இலவச ஆம்புலன்ஸ் திட்டம் போன்ற எண்ணற்ற சுகாதார திட்டங்கள் நாட்டில் முன்னோடி திட்டங்களாக உள்ளது.

இத்திட்டங்களின் சிறப்பான செயல்பாட்டால் தேசிய அளவிலும், இதர மாநிலங்களிலும் இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஏழை எளிய மக்களுக்கு, மருத்துவ சேவை வழங்க வேண்டும் என்பதற்காகத் தான் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் பயனடைந்தோர் எண்ணிக்கை விரைவில் ஒரு கோடியை அடைய இருக்கிறது. சாலை விபத்தினால் ஏற்படக்கூடிய இறப்பை குறைக்கும் வகையில், ‘இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48’ திட்டம் 18.12.2021 முதல் செயல்படுத்தப்படுகிறது.

நோயை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க வகை செய்யக்கூடிய வகையிலே ‘கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்’ மீண்டும் செயல்படுத்தப்படுகிறது. இதுவரை 17 லட்சத்து 16 ஆயிரம் நபர்கள் பரிசோதனை செய்திருக்கிறார்கள். இந்த மூன்று திட்டங்களும், இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் செயல்படுத்தப்படவில்லை. ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அடிக்கடி தணிக்கை செய்து, அங்கு வரும் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறதா. மருந்து தட்டுப்பாடு இல்லாமல் இருக்கிறதா. மருத்துவமனைகளுக்கு என்ன தேவைகள் என்பதைக் கண்டறிந்து, குறைகளை களைய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மருத்துவம் - மக்கள் நல்வாழ்வு - சுகாதாரம் ஆகியவற்றில் தமிழகம் மிக உயர்ந்த குறியீடுகளை அடைய வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். தமிழ்நாட்டில், 100 சதவீத பிரசவங்கள் மருத்துவ நிலையங்களில் நிகழ்கின்றன. இது எந்த மாநிலத்திலும் இல்லாத சாதனை. தடுப்பூசியிலும் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது. இதய மாற்று அறுவை சிகிச்சை மற்றும் நுரையீரல் மாற்று சிசிச்சையில் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடத்தை வகித்து கொண்டிருக்கிறது. உடல் உறுப்புதானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் உலகளவில் முதலிடம் தமிழ்நாடு. சுகாதார குறியீடுகளை வைத்து மருத்துவமனைகளை தரவரிசை படுத்துகிறார்கள்.

இந்த தரவரிசையில் பின்னடைந்துள்ள மருத்துவமனைகளை முன்னே கொண்டு வர வேண்டும். மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பை சீர்செய்தால் மட்டும் போதாது. மருத்துவ துறை - மருத்துவ முறை நவீனமயமாக வேண்டும். சிகிச்சை முறைகள் நவீனமயமாக வேண்டும். நோய்கள் புதுப்புது அவதாரம் எடுத்து வருகிறது. அதனை வெல்லும் முறைகளும் பன்முனை கொண்டதாக மாற வேண்டும். பொதுவாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவை பெரிய குறைபாடாக அனைத்து மருத்துவர்களும் சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். எனவே, நோய் எதிர்ப்பு திறனை உருவாக்குவதற்கு அரசின் சார்பில் என்ன மாதிரியான திட்டமிடுதலை செய்யலாம் என்பதையும் நாம் ஆராய வேண்டும்.

நோயை குணப்படுத்துதல் என்பது மருந்து, மாத்திரைகளோடு முடிந்துவிடவில்லை. அதனைத் தாண்டிய பல்வேறு விஷயங்கள் இருக்கிறது. அது குறித்தும் நாம் ஆராய வேண்டும். அந்த வகையில் இந்த மாநாடு, தமிழக மக்கள் நல்வாழ்வு துறையின் வரலாற்றில் மிக முக்கியமான திருப்புமுனையாக அமையும்; அமைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, துறை செயலாளர் செந்தில்குமார், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் லால்வேனா, தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதிஷ், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் கணேஷ், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் உமா, தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் தீபக் ஜேக்கப் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில், 100 சதவீத பிரசவங்கள் மருத்துவ நிலையங்களில் நிகழ்கின்றன. இது எந்த மாநிலத்திலும் இல்லாத சாதனை.

Tags : Chief Minister ,M. K. Stalin , Inadequate treatment system should be modernized if hospital infrastructure is repaired: Chief Minister M K Stalin's speech at the inauguration of the Health Conference
× RELATED வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும்...