×

குன்றத்தூர் பணிமனையில் பரிதாபம் ரிவர்சில் வந்த பஸ்சில் சிக்கி காவலாளி உடல் நசுங்கி பலி: டிரைவரிடம் விசாரணை

பல்லாவரம்: குன்றத்தூர் மாநகர பஸ் பணிமனையில் ரிவர்சில் எடுத்த பஸ்சில் சிக்கிய காவலாளி உடல்நசுங்கி பலியானார். இதுதொடர்பாக, டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குன்றத்தூர், புது வட்டாரம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(46). இவர், குன்றத்தூர்-திருநீர்மலை செல்லும் சாலையில் உள்ள மாநகர பஸ் பணிமனையில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை குன்றத்தூரில் இருந்து பிராட்வே செல்லும் பஸ்சை பணிமனையில் டீசல் போட்டு விட்டு இயக்க தொடங்கினார். பின்பக்கமாக ரிவர்சில் எடுத்தபோது, அங்கு காவலாளியாக வேலை செய்து வந்த குன்றத்தூரை சேர்ந்த வேலுச்சாமி (65) என்பவர் மீது எதிர்பாராத விதமாக பஸ் மோதியது. இதில், வேலுச்சாமி சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள், உடனடியாக குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், இறந்த வேலுச்சாமியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், வேலுச்சாமி கவனிக்காமல் இருந்த நிலையில், பஸ் ரிவர்சில் வந்து இடித்ததில், சக்கரத்தில் சிக்கி இறந்தது தெரியவந்தது. மேலும், குன்றத்தூர் பணிமனையில் போதிய மின்விளக்குகள் இல்லாததும் விபத்து நடந்ததற்கு காரணம் என கூறப்படுகிறது. இருப்பினும், விபத்துக்கு காரணமான டிரைவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

* பஸ் மோதி வாலிபர் சாவு
வடபழனி மேம்பாலத்தில், கார் டிரைவாக பணிபுரிந்து வந்த புகழேந்தி (35) மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மாநகர பேருந்து ஒன்று பைக் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில், பைக்கை ஓட்டி சென்ற புகழேந்தியின் தலை மீது பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதை தொடர்ந்து, பாண்டி பஜார் போக்குவரத்து புலானாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து புகழேந்தியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மோட்டார் பைக் மீது மோதிய மாநகர பேருந்தை ஓட்டி வந்த சக்திமான் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Parithapam ,Kunradthur , A security guard was crushed to death by a reverse bus at Kunradthur workshop: inquiry to the driver
× RELATED கடன் பிரச்னை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை