×

சோழவந்தான் அருகே முதலைக்குளம் கண்மாயில் மீன் வளர்க்க ஏலம் விட கூடாது: பொதுமக்கள் கோரிக்கை

சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே விக்கிரமங்கலத்தை அடுத்த முதலைக்குளத்தில் பதினெட்டாம்படி கருப்புச்சாமி மற்றும் கம்ப காமாட்சி அம்மன் கோயில் உள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன், இங்குள்ள பெரிய கண்மாயில் மீன் குஞ்சு வாங்கி விடுவார்கள். இதில் வளரும் மீன்களை மற்ற கண்மாயைப் போல் விற்பனைக்கு விடாமல் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் \” மீன்பிடி திருவிழா\” நடைபெறும். இந்த மீன்பிடி திருவிழாவில் கலந்து கொள்ளுமாறு மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், திருச்சி உள்ளிட்ட மாவட்ட சந்தைகளில் தண்டோரா மூலம் அறிவிப்பார்கள்.

அந்த நாளில் பல்வேறு மாவட்டத்திலிருந்து வந்தவர்களும், சுற்றுப்பகுதி பொதுமக்களும் மீன் பிடித்து செல்வார்கள். தெய்வ குற்றமாகி விடும் என்பதால், இந்த மீன்களை யாரும் விற்பனை செய்யாமல், அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து மகிழ்வார்கள். இதன்படி பல நூறு வருடங்களாக பக்தர்கள் நேர்த்திக்கடனாக விட்ட மீன்களை பொதுமக்கள் இலவசமாக பிடித்து ருசித்து வந்தனர். இந்நிலையில், இந்த வருடம் பொதுப்பணித்துறை மூலம் குப்பணம்பட்டி அலுவலகத்தில் வரும் 23ம் தேதி ரூ.1,60,500க்கு இக்கண்மாயை ஏலம் விடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையறிந்த இப்பகுதி மக்கள் பழமை வழக்கம் மாறாமலிருக்க, இந்த ஏலத்தை ரத்து செய்யுமாறு மதுரை மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பாசனக் கமிட்டி தலைவர் முதலைக்குளம் ராமன் கூறுகையில், இக்கண்மாயில் பல நூற்றாண்டுகளாக பக்தர்கள் விடும் மீன்களை பிடிக்க வருடத்திற்கு ஒரு முறை மீன்பிடி திருவிழா நடத்தி, இவ்வூரில் கலாச்சார விழாவாக கொண்டாடுகிறோம். சக்தி வாய்ந்த தெய்வங்களின் ஆசியால் இங்குள்ள மீன்கள் பல நோய் தீர்க்கும் மருந்து என்பது பக்தர்களின் மாறாத நம்பிக்கை. இக்கண்மாய் மீன்களை, மீன்பிடி திருவிழா நாள் தவிர மற்ற நாட்களில் தெய்வ குற்றமாகி விடும் என பயந்து யாரும் பிடிக்க மாட்டார்கள்.

அந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்த கண்மாயில் முதல் முறையாக பொதுப்பணித்துறையினர் மீன் வளர்க்க ஏலம் விட உள்ள தகவல் இப்பகுதி மக்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது. மேலும் தெய்வ குற்றமாகிவிடுமோ என அச்சமடைந்துள்ளனர். எனவே இந்த ஏலத்தை ரத்து செய்து, பழங்கால வழக்கப்படி பக்தர்கள் வேண்டுதலுக்காக மீன் விடவும், மீன்பிடி திருவிழா நடத்தவும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கலெக்டரை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

Tags : Kudlaikulam Kanmai ,Cholavanthan , Don't auction fish farming in Kudlaikulam Kanmai near Cholavanthan: Public demand
× RELATED தேர்தல் பிரசாரம் விறுவிறு: டீக்கடைக்காரர்கள் `குஷி’