×

மாநகரில் 3 முக்கிய பகுதிகளில் ரூ.30.50 கோடியில் ஸ்மார்ட் சாலை அமைகிறது-இந்த வாரம் பணிகள் துவக்கம்: அதிகாரிகள் தகவல்

ஈரோடு : ஈரோடு மாநகரில், 3 முக்கிய பகுதிகளில் ரூ.30.50 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சாலை அமைக்கும் பணி இந்த வாரம் துவங்கப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் பெருகி வரும் மக்கள் தொகை மற்றும் வாகன போக்குரத்துக்கு ஏற்ப சாலை மேம்பாடு, சாலை பாதுகாப்பு திட்டங்கள் அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், மாநகராட்சி பகுதிகளில் போடப்பட்ட சாலைகள் திட்டப்பணிகளுக்காக தோண்டப்பட்டு சிதைப்பதை தவிர்க்க ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீன சாலை போடப்பட்டு வருகிறது.

இதில், ஈரோடு மாநகராட்சியில் முதற்கட்டமாக சுமார் ரூ.20 கோடியில் ஈரோடு பெரியார் நகர் சாலை, ஸ்டேட் பேங்க் சாலை, எஸ்கேசி சாலை, கலைமகள் பள்ளி வீதி, ஜீவானந்தம் வீதி ஆகிய பகுதிகளில் நவீன சாலை போடப்பட்டது. இதற்காக பாதாள மின் கேபிள், குடிநீர் குழாய், பிஎஸ்என்எல் கேபிள் போன்றவை சாலையோரத்தின் அடியில் கொண்டு செல்லப்பட்டு, அதன் மேல் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

இதனால், சாலையில் வாகனம் செல்வதற்கும், சாலையோரத்தில் பொதுமக்கள் நடந்து செல்லவும் பயனுள்ளதாக இருந்தது. இந்நிலையில், இத்திட்டத்தின் தொடர்ச்சியாக ஈரோடு மாநகரின் முக்கிய சாலைகளான அரசு மருத்துவமனை அமைந்துள்ள ஈவிஎன் சாலை முழுவதும், ரயில்வே ஸ்டேஷன் சாலை, காளைமாட்டு சிலையில் இருந்து காந்திஜி சாலை வரை நவீன சாலை அமைக்க திட்டமிட்டு, பரிந்துரைக்கப்பட்டது.

இதற்காக மாநகராட்சி ஸ்மார்ட் திட்டி திட்டத்தின் கீழ் ரூ.23.60 கோடியும், சாலை மேம்பாடு திட்டத்திற்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.6.90 கோடி என மொத்தம் ரூ.30.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டப்பணிகளுக்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு  பூமி பூஜை நடத்தப்பட்டது. இதையடுத்து திட்டப்பணிகள் இந்த வாரம் இறுதிக்குள் துவங்கப்படுகிறது.  

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட ஈவிஎன் சாலை, ரயில்வே ஸ்டேஷன் சாலை, காந்திஜி சாலையில் ஸ்மார்ட் சிட்டி மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை மேம்பாட்டு பணியுடன் ஸ்மார்ட் சாலை அமைக்கும் திட்டப்பணி ரூ.30.50 கோடியில் துவங்கப்பட்டுள்ளது.

இந்த 3 சாலைகளிலும் குடிநீர் குழாய், மின் கேபிள், டெலிபோன் கேபிள்கள் அனைத்தும் சாலையோரத்தின் அடியில் அமைத்து, அதன் மேல் பாதசாரிகளான பொதுமக்கள் நடந்து செல்ல வசதியாக நடைமேடை அமைக்கப்படும். குறிப்பாக அரசு மருத்துவமனை அருகே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் துவங்கி சென்னிமலை சந்திப்பு வரையும், பின்னர், ரயில்வே ஸ்டேஷன் சாலை முதல் காளைமாட்டு சிலை வரையும், காந்திஜி சாலை எஸ்பி அலுவலகம் முதல் காளைமாட்டு சிலை வரையும் இந்த ஸ்மார்ட் சாலை அமைக்கப்பட்டு, சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த வாரம் இத்திட்டப்பணிகள் துவங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆக்கிரமிப்பாளர்களுக்கு முன் அறிவிப்பு

மேலும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஸ்மார்ட் சாலை பணிக்காக தற்போது சாலையோரத்தில் உள்ள மரங்கள், மின் கம்பங்கள்,  டிரான்ஸ்பார்மர்கள் சம்பந்தப்பட்ட துறை அனுமதி பெற்று அகற்றப்படும்.  அதேபோல, சர்வேயர்கள் மூலம் நிலம் அளவீடு செய்யப்பட்டு, சாலை  ஆக்கிரமிப்புகள் இருந்தால், அவற்றை அகற்ற ஆக்கிரமிப்பாளருக்கு முறையான முன்  அறிவிப்பு கொடுத்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் பகுதி, பகுதியாக மேற்கொள்வதால் போக்குவரத்திற்கு ஏதும் இடையூறு இருக்காது’’ என தெரிவித்தனர்.

Tags : Erode: In Erode city, the construction of smart roads worth Rs. 30.50 crore in 3 major areas will be started this week, the highways department said.
× RELATED அகரம், பாலவாக்கம் பகுதிகளில் பொங்கல்...