×

மெடிக்கல் ஸ்டோரில் பணம் கேட்டு மிரட்டியதால் நாமக்கல்லில் போலி மருந்து அதிகாரிக்கு அடி, உதை: போலீசார் எச்சரித்து அனுப்பினர்

நாமக்கல்: நாமக்கல் மெடிக்கல் ஸ்டோரில் பணம் கேட்டு மிரட்டிய போலி மருந்து அதிகாரிக்கு அடி, உதை விழுந்தது. நாமக்கல் நகரில், சேலம் ரோட்டில் உள்ள ஒரு மருந்து கடைக்கு,  நேற்று முன்தினம் இரவு 55 மதிக்கத்தக்க ஒரு டிப்டாப் உடையணிந்த நபர் சென்றுள்ளார். அவர், தன்னை டிரக் இன்ஸ்பெக்டர் என்றும், சேலத்தில் பணிபுரிந்து வருவதாகவும் கூறியுள்ளார்.

பின்னர், அந்த கடையில் போலி மருந்துகள் அதிகம் விற்பனை செய்யப்படுவதாகவும், இது பற்றி கண்டுகொள்ளாமல் இருக்க தனக்கு பணம் தர வேண்டும் என்றும் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கடைக்காரர், எங்களிடம் போலி மருந்துகள் எதுவும் இல்லை. உங்களது அடையாள அட்டையை காட்டுங்கள் என கூறியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இது பற்றி தகவல் அறிந்து, அங்கு பொதுமக்கள் கூட்டமாக கூடினர். மேலும், மருந்து வணிகர் சங்க  நிர்வாகிகளும் வந்து விசாரித்தனர்.

அப்போது சிலர், அந்த நபரை தாக்கியுள்ளனர். இதை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர்.பின்னர், அந்த நபரை நாமக்கல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரித்த போது, அவர் சேலத்தை சேர்ந்த தியாராஜன் என்பதும், டிரக் இன்ஸ்பெக்டர் என கூறி, மெடிக்கல் ஸ்டோர் உரிமையாளர்களை ஏமாற்றி வந்ததும் தெரியவந்தது. அவர் குடிபோதையில் இருந்ததால், முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். யாரும் புகார் செய்யாததால் போலீசார் அவரை எச்சரித்து அனுப்பினர்.


Tags : Namakkal , Medical Store, Money, Intimidation, Namakkal, Fake Medicine Officer, Police
× RELATED புதிய செயலி மூலம் வாகன புகை பரிசோதனை சான்று