×

முத்துப்பேட்டை பகுதியில் வெளுத்து வாங்கிய கனமழையால் நீர் நிலைகள் நிரம்பியது

*ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

முத்துப்பேட்டை : முத்துப்பேட்டை பகுதியில் வெளுத்து வாங்கிய கனமழையால் நீர் நிலைகள் நிரம்பியது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வில்லை. இதனால் இப்பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்க கடல் மற்றும் இலங்கையையொட்டிய பகுதியில் நிலை கொண்டு உள்ளது.

இதில் தமிழக கடற்கரையை நகரும் என்பதால் நாளை (13ம் தேதி) வரை தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியாக கடந்த இரண்டு நாட்களாக மழை விட்டிருந்த நிலையில் மீண்டும் முத்துப்பேட்டை பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை வெளுத்து வாங்கி வருகிறது. நேற்று காலை முதல் இரவு வரை இடைவிடாமல் மழை பெய்து வருகிறது.

இதில் சில நேரம் கனமழை சில நேரம் லேசான மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டு மக்கள் வெளியில் செல்ல முடியவில்லை. கடைத்தெருவில் மக்கள் கூட்டம் இல்லாததால் வியாபாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. ஆங்காங்கே மழைநீர் தேங்கி போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகள் மழைநீர் சூழ்ந்துள்ளன. குளம் குட்டை எரி உட்பட நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. வடிக்கால் பல பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் பெரும்பாலான குடியிருப்பு பகுதிகள் மழைநீர் சூழ்ந்துள்ளது. அதற்காக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நடந்து வருகிறது.

அதேபோல் கனமழையால் இப்பகுதியில் சென்று கடலில் வடியும் கோரையாறு, பாமணியாறு, மரைக்காகோரையாறு, கிளந்தாங்கி ஆறு, கந்தபரிச்சான் ஆறு, வளவனாறு மற்றும் அதன் கிளை ஆறுகள் உள்ளிட்ட ஆறுகளில் அதிகளவில் தண்ணீர் வரத்து உள்ளதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சென்று வடிந்து வருகிறது.

இதனால் இப்பகுதியில் உள்ள அனைத்து தடுப்பணை சட்ராஸ்களிலும் அனைத்து கதவுகளும் திறக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடல்கரை சார்ந்த பகுதி என்பதால் அதிகளவில் மீனவர்கள் குடும்பங்கள் அதிகளவில் உள்ளது. இதில் முத்துப்பேட்டை ஆசாத்நகர், தெற்குதெரு, பேட்டை ஆகிய பகுதியில் சுமார் இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ளனர்.

அதேபோல் முத்துப்பேட்டை அருகில் உள்ள ஆலங்காடு, உப்பூர், ஜாம்புவானோடை, தில்லைவிளாகம், செங்காங்காடு, இடும்பாவனம், தொண்டியக்காடு, கற்பகநாதற்குளம், முனங்காடு, விளாங்காடு உட்பட கடலோர கிராமங்களில் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ளனர். இந்நிலையில் இப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் மீனவர்கள் கடந்த இரண்டு தினங்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

மேலும் மீன்வளத்துறை சார்பில் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்றும் எச்சரித்துள்ளனர்.இதனால் மீனவர்கள் செல்லும் சுமார் 200க்கும் மேற்பட்ட படகுகள் ஆசாத்நகர் கோரையாறு, தெற்கு தெரு கோரையாறு, பேட்டை கோரையாறு, ஜாம்புவானோடை படகு துறை ஆகிய பகுதியில் பாதுக்காப்பாக நிறுத்தப்பட்டு இருந்தது. அதேபோல் சுற்று வட்டார மீனவ கிராமங்களில் அந்தந்த பகுதியில் படகுகளை நிறுத்தி வைத்துள்ளனர்.

Tags : Thiruppat , Muthupettai, Heavy Rains, Floods,
× RELATED பிளாஸ்டிக் இல்லாத தமிழகம்...