துணை நடிகரின் மனைவியை கட்டிப்போட்டு 200 சவரன் நகைகள் ரூ.2 லட்சம் கொள்ளை: கொள்ளையர்களை கைது செய்ய பெங்களூரு விரைந்தது தனிப்படை

ஆலந்தூர்: நந்தம்பாக்கத்தில் துணை நடிகரின் மனைவியை கட்டிப்போட்டு 200 சவரன் நகைகள், ரூ.2 லட்சத்தை கொள்ளையடித்த கும்பலை பிடிக்க தனிப்படை பெங்களூரு விரைந்துள்ளது. சென்னை நந்தம்பாக்கம் டிபன்ஸ் காலனி 12வது தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (54). இவர், எல்லாம் அவன் செயல் உள்பட பல படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். இவரது மனைவி ராஜி (48). இவர் நேற்றுமுன் தினம் தனது பிள்ளைகளுடன் வீட்டில் தனியாக இருந்தபோது, பின்பக்க கதவு வழியாக உள்ளே நுழைந்த 2 மர்ம ஆசாமிகள், ராஜியை கத்தியை காட்டி மிரட்டி, பீரோ சாவியை பிடுங்கியுள்ளனர்.

பின்னர், அவரை கட்டிப்போட்டுவிட்டு, பீரோவில் வைத்திருந்த 200 சவரன் தங்க நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். ராஜி கூச்சல் போட்டதால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து, கட்டை அவிழ்த்து விட்டு விசாரித்தனர். அப்போது 2 பேர் தன்னை கட்டிப்போட்டு கொள்ளையடித்து சென்றதாக கூறினார். இதையடுத்து, பொதுமக்கள் போலீசாருக்கு புகார் கொடுத்தனர். அதன்பேரில், நந்தம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தடயங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில்,  துணை நடிகர் ராதாகிருஷ்ணன் வீட்டில் வேலை பார்க்கும் நேபாளத்தை சேர்ந்த ரமேஷ் (34) என்பவர் தலைமறைவாகி இருப்பது  போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

மேலும், போலீசார் அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், 2 நபர்கள் வீட்டில் நுழைவதும், பின்னர் கொள்ளையடித்துவிட்டு ஆட்டோவில் 3 பேராக செல்வதும் தெரிந்தது. மேலும், வேலைக்காரர் ரமேஷ் தனது கூட்டாளிகளுடன் கொள்ளையில் ஈடுபட்டு, பின்னர் பெங்களூருக்கு ஆட்டோவில் தப்பி சென்றது தெரியவந்தது. இதைதொடர்ந்து, உதவி கமிஷனர் சபிக் அகமது தலைமையிலான தனிப்படை போலீசார் குற்றவாளிகளை பிடிக்க பெங்களூரு விரைந்துள்ளனர்.

Related Stories: