×

சிவன்மலை சுப்பிரமணியசாமி கோயில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இளநீர், தென்னை ஈக்குமாறு வைத்து வழிபாடு

காங்கயம்: சிவன்மலை சுப்பிரமணியசாமி கோயில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நேற்று முதல் இளநீர் மற்றும் ஈக்குமாறு வைத்து பூஜிக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே சிவன்மலை சுப்பிரமணியசாமி கோயில், கொங்கு மண்டலத்தில் முருகப்பெருமான் குடிகொண்டு அருள்பாலிக்கும் கோயில்களில் முக்கியமானது. சிவ வாக்கிய சித்தர் அருள்பெற்ற ஸ்தலமாகவும், விநாயகப்பெருமான் முருகனை வழிபடும் ஸ்தலமாகவும் விளங்குகிறது. வேறு எந்த கோயிலுக்கும் இல்லாத சிறப்பு இந்த கோயிலுக்கு உள்ளது. அது, இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும். முருகப்பெருமானே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளை சுட்டிக்காட்டி அதை உத்தரவு பெட்டியில் வைக்க ஆணையிடுவார் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

மேலும், அவ்வாறு உத்தரவு பெற்ற பக்தர் கோயில் நிர்வாகத்தை அணுகி விவரத்தை கூறினால் மூலவர் முன்பு பூப்போட்டு உத்தரவு கேட்டு அதன் பின்னர் அப்பொருள் பெட்டியில் வைப்பது வழக்கம். இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் ஏதும் கிடையாது. மேலும், ஒரு பொருள் பக்தரின் கனவில் உத்தரவாகும் வரை பெட்டியில் வைக்கப்பட்டு பூஜிக்கப்படும். இவ்வாறு பெட்டியில் வைக்கப்பட்ட பொருள் ஏதாவது ஒரு வகையில் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். அது நேர்மறையானதாகவும் இருக்கலாம். எதிர்மறையானதாகவும் இருக்கலாம். முந்தைய காலங்களில் சைக்கிள் வைத்து பூஜித்தபோது, அதன் பயன்பாடு வெகுவாக குறைந்து போனது. மண் வைத்து பூஜித்தபோது நிலத்தின் விலை பல மடங்கு உயர்ந்தது.

துப்பாக்கி தோட்டா வைத்து பூஜித்தபோது கார்கில் போர் ஏற்பட்டு அதில் இந்தியா வெற்றி வாகை சூடியது. தண்ணீர் வைத்து பூஜித்தபோது சுனாமி பேரலை ஏற்பட்டு ஆயிரக்கணக்கானோர் பலியாயினர். இவ்வாறு எந்தப்பொருள் வைக்கப்படுகிறதோ?, அது ஏதாவது ஒரு வகையில் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் 6ம் தேதி முதல் திருப்பூர் குமரன் நகரை சேர்ந்த கார்த்திகேயன் என்ற பக்தரின் கனவில் உத்தரவான வேல் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று முதல் முத்தூர் அருகே மங்களப்பட்டியை அடுத்துள்ள கருந்தேவிக்கவுண்டன்புதூரை சேர்ந்த பக்தர் குமாரசாமி கனவில் உத்தரவான இளநீர் மற்றும் ஈக்குமாறு வைத்து பூஜிக்கப்படுகிறது. இது சமூகத்தில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது போகப்போக தெரியும் என பக்தர்கள் தரப்பில் தெரிவித்தனர்.

Tags : Sivanmalai Subramaniaswamy ,Temple ,Lord , Sivanmalai Subramaniaswamy Temple Lord worships by putting fresh water and coconut in the order box
× RELATED திருத்தணி முருகன் கோயிலில் வாகன நெரிசல்: பக்தர்கள் அவதி