×

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 6 பேரும் விடுதலை: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

டெல்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1991ம் ஆண்டு மே  21ம் தேதி நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம்  தொடர்பாக பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன் ஆகியோருக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

அதன்பின் கடந்த 2014ம் ஆண்டு பேரறிவாளன் உள்ளிட்ட நான்கு பேரின் கருணை மனு மீது எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதை சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம், அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. தொடர்ந்து, தன்னை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் சார்பில் 2016ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த மே.18ம் தேதி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் , 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டது. சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி அவரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்ததது.

இந்நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிசந்திரன், ஹரிகரன் ஆகியோர் தங்களை சிறையில் இருந்து விடுதலை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தமிழக அரசு பதிலளித்துள்ள நிலையில், ஒன்றிய அரசுக்கும் பதிலளிக்க நோட்டீஸ்  அனுப்பப்பட்டிருந்தது. நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்யக் கோரிய வழக்கை நவ. 11ம் தேதிக்கு (இன்று) உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

அதன்படி, உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வு இன்று மேற்கண்ட வழக்கில் தீர்ப்பளித்தது. அதில், ‘உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அதிகார சட்டத்தை பயன்டுத்தி சிறைத் தண்டனை அனுபவித்து வரும் குற்றவாளிகளான நளினி, ரவிச்சந்திரன், முருகன்,  சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரும் விடுதலை செய்யப்படுகின்றனர். பேரறிவாளனை உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுவித்தது போன்று, இவர்களும் விடுதலை பெறுவதற்கான தகுதியை பெற்றவர்கள்’ என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன், முருகன்,  சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரும் உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து விரைவில் சிறையில் இருந்து விடுதலையாவார்கள்.

Tags : Nalini ,Rajiv Gandhi ,Supreme Court , 6 people including Nalini in jail in Rajiv Gandhi murder case released: Supreme Court orders action
× RELATED வெப்பத்தால் ஏற்படும்...