×

வடகிழக்கு பருவமழை துவங்குவதால் நீர்நிலை உடைப்பு தடுக்க சாக்கில் மணல் நிரப்பும் பணி-நெடுஞ்சாலை துறையினர் தீவிரம்

தஞ்சாவூர் : வடகிழக்கு பருவமழை துவங்குவதால், நீர் நிலை உடைப்பு தடுக்க சாக்கில் மணல் நிரப்பும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள காரணத்தால், தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக அனைத்து பகுதிகளும் மழை பெய்து வருகிறது. இதனால் கிராமப்புறங்கள் மற்றும் ஊர் பகுதிகளில் உள்ள குளங்கள், ஏரிகள் நிரம்பி வருகிறது. மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பிலும் அவ்வப்போது, கரையோர பகுதியில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து நேற்று தஞ்சாவூர் பழைய மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் சாலை பணியாளர்கள் சாக்க்கில் மணல் நிரப்பும் பணியில் ஈடுபட்டு வந்தனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசின் ஆணைக்கிணங்க இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளது.

தற்போது டெல்டா மாவட்டங்களில் அனைத்து பகுதிகளும் மழை பெய்து வருகிறது. இதனால் அந்தந்த பகுதிகளில் உள்ள குளங்கள், ஏரிகள் அனைத்தும் 70 முதல் 80 சதவீதம் நிரம்பியுள்ளது. இதனால் பல இடங்களில் பாலங்கள் உடைப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. அதேபோல் காவேரி கரையோரத்தில் பொதுமக்கள் வசிக்கும் இடங்களிலும் தண்ணீர் நிரம்பியுள்ளது.
பல இடங்களில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கின்றன. இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து வருகின்றனர்.

எந்த அசம்பாவிதங்களும் நடக்காதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் துரிதமாக செயல்பட்டு வருகிறது. மேலும் அடுத்த இரண்டு நாட்களில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தற்போது சம்பா சாகுபடியும் தொடங்கிவிட்டது.மழை பெய்வதால் விவசாயிகள் அதிக அளவில் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். நெல்லின் ஈரப்பதம் காரணமாக நெற்களை விற்க முடியாமல் தவித்து வருகின்றனர். தற்போது பெய்த கனமழையால் தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி செய்த வயல்களில் அதிகளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதனை வெளியேற்றம் செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும், ஒரு சில இடங்களில் தண்ணீர் வடிவமைப்பதற்கு வழி இல்லாத நிலை உள்ளது. தொடர்ந்து கன மழை பெய்தால் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால் நெருக்கல் அழுகும் நிலை உள்ளது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பலமுறை நேரடியாக சம்பவம் இடத்திற்கு சென்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி வருகிறார். அதிக பகுதிகளில் ஏரிகள் குளங்கள் தூர் வாராமல் இருப்பதால் தண்ணீரை வெளியேற்றதற்கான வழி இல்லாமல் உள்ளது.

தற்போது மழை பெய்து வருவதால் வருவாய்த் துறையினர், தாசில்தார்கள், நெடுஞ்சாலை துறையினர், பொதுப்பணி துறையினர், நீர்வளத் துறையினர் அனைவரும் முழு வீச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். எந்த இடத்தில் எந்த நேரத்தில் உடைப்பு ஏற்பட்டால் உடனே சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களை பத்திரமாக அப்புறப்படுத்தும் வேளையிலும் உடைப்புகளை உடனே சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்காக தஞ்சாவூர் மாவட்டத்தில் பல லட்சம் கணக்கில் மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பிலும் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாயம் குறித்து அறிவுறுத்தல் செய்யப்பட்டு வருகிறது.



Tags : North East , Thanjavur: With the onset of North East Monsoon, the highway department is actively engaged in filling the sacks with sand to prevent the water table from breaking.
× RELATED வட கிழக்கு டெல்லியில் கன்னையா குமார் போட்டி: காங். அறிவிப்பு