×

கூடங்குளம் அணு உலையின் பாதுகாப்புக்காக எடுத்த நடவடிக்கைகள் என்ன? அறிக்கை தாக்கல் செய்ய ஒன்றிய அரசுக்கு உத்தரவு

புதுடெல்லி: ‘கூடங்குளம் அணு உலையின் பாதுகாப்புக்கு இதுவரை எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,’ என ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கூடங்குளம் அணு உலை தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் சுந்தர்ராஜன் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், ‘கூடங்குளம் அணு உலையின் அணுக்கழிவுகள் முறையாக  கையாளப்படாமலும், உரிய பாதுகாப்பு விதிகளை பின்பற்றாமலும் இருந்து வருகிறது. அணுக்கழிவுகளை பாதுகாப்பாக அகற்றாமல், கடலில் கொட்டப்பட்டு வருகிறது. அதனால், மிகப்பெரிய சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும். எனவே, கூடங்குளம் அணு உலையில் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றும் வரை, அணு உலையில் மின் உற்பத்தி செய்ய தடை விதிக்க வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒன்றிய அரசின் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், ‘கூடங்குளம் அணு உலை விவகாரத்தில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் உள்ளிட்ட எதையும் தமிழக அரசு செய்யாமல் இருக்கிறது,’ என குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், ‘கூடங்குளம் அணு உலையை பொருத்தவரையில், அவற்றை பாதுகாப்பாக கையாள நீதிமன்றங்கள் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகள் ஏது பின்பற்றப்படவில்லை.  ரஷ்யாவின் செர்னோபில், ஜப்பானின் புகுஷிமா ஆகிய இடங்களில் ஏற்பட்ட நிலை, கூடங்குளத்திலும் ஏற்படும். அவ்வாறு நடந்தால், அது தென் இந்தியாவை மொத்தமாக பாதிக்கும். அதை தடுக்க, உச்ச நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களை கேட்ட பிறகு தலைமை நீதிபதி சந்திரசூட் பிறப்பித்த உத்தரவில், ‘கூடங்குளம் அணு உலை பிரச்னை மிகவும் முக்கியமானது. இதில் நீதிமன்றம் மட்டுமின்றி, பொதுமக்களும் திருப்தி அடையும் வகையில் ஒன்றிய அரசு ஏதாவது செய்ய வேண்டும். இவ்வழக்கில் விசாரிக்க வேண்டிய அம்சங்கள், அணு உலையின் பாதுகாப்புக்கு எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகளை பட்டியலிட்டு, உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு அறிக்கை அளிக்க வேண்டும்,’ என தெரிவித்து, விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தார்.

Tags : Kudankulam Nuclear Reactor ,Union Government , What are the measures taken for the safety of Kudankulam Nuclear Reactor? Order to Union Government to submit report
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...