×

நாளை காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா; பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு:ட்ரோன்கள் பறக்க தடை: 3,000 போலீசார் பாதுகாப்பு

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் நாளை (நவ. 11) நடைபெறவுள்ள 36வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். பட்டமளிப்பு விழாவில் பிரதமர், முதல்வர், ஆளுநர் உட்பட பல முக்கிய விவிஐபிக்கள் கலந்து கொள்ள இருப்பதையொட்டி, தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில், மாவட்ட எஸ்பி பாஸ்கரன் முன்னிலையில், 8 எஸ்பிக்கள், 15 ஏடிஎஸ்பிகள், 35 டிஎஸ்பிகள் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட வெடிகுண்டு நிபுணர் குழு, வெடிகுண்டு மோப்பநாய் குழு, சிறப்பு தொழிற்முறை காவல்துறையினர், மத்திய சிறப்பு பாதுகாப்பு படையினர், மத்திய, மாநில உளவுத்துறையினர் என 3,000க்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக வளாகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும், தனிநபர்களும் முழு சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் தங்கும் அறை, தனி வழி உட்பட முக்கிய பாதுகாப்பு பகுதியினை மத்திய பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. பல்கலைக்கழகத்தில் பிரதமருக்கு விருந்தினர் இல்லமும், முதல்வருக்கு துணைவேந்தர் இல்லமும் தயார் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மதுரை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் காந்திகிராம பல்கலைக்கழகத்திற்கு வருகிறார். பல்கலைக்கழக வளாகம் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உயர் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட காவல்துறை சார்பில் திண்டுக்கல் மாவட்ட எல்லையான அம்மையநாயக்கனூர் முதல் சின்னாளப்பட்டி, காந்திகிராமம் வரை, திண்டுக்கல் மாநகரம் முழுவதும் உயர் பாதுகாப்பு மண்டலம் என்பதால், நாளை மறுதினம் வரை 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

காந்திகிராம பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடு தளத்தில் மத்திய தொழில்நுட்ப பாதுகாப்பு படையினர் முன்னிலையில், 10க்கும் மேற்பட்ட முறை ஹெலிகாப்டரை இறக்கி நேற்று சோதனை செய்யப்பட்டது.  வானிலை மாற்றத்தை பொறுத்து இப்பகுதியில் உள்ள மலைகள், உயர் கோபுரங்கள் மற்றும் கட்டிடங்கள் குறித்தும் விமானம் பறக்க வேண்டிய தூரம், உயரம் குறித்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக, நேற்று மாலை சுற்று வட்டார பகுதிகள் முழுவதும் ஹெலிகாப்டரில் வானில் வட்டமடித்து சோதனை செய்தனர். கொரோனா சோதனை கட்டாயம் பிரதமர், முதல்வர் உட்பட முக்கிய விவிஐபிக்கள் கலந்து கொள்ளும் விழா என்பதால் விழா ஏற்பாட்டாளர்கள், அதிகாரிகள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், பட்டம் பெறும் மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், பத்திரிகையாளர்கள் என கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு சான்றிதழ் பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உச்சகட்ட பாதுகாப்பு பிரதமர் மோடி நாளை தனி விமானம் மூலம் பெங்களூரிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு பிற்பகல் 2.50 மணிக்கு வந்தடைகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காந்திகிராம பல்கலைக்கழகம் செல்கிறார். பின்னர் மறுமார்க்கமாக அங்கிருந்து 4.30 மணிக்கு புறப்படும் பிரதமர் மோடி, மதுரையிலிருந்து மாலை 5.15 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு மதுரை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Tags : Gandhi Grama University ,graduation ,Modi ,Chief Minister ,Stalin , Gandhi Grama University convocation tomorrow; PM Modi, CM Stalin participation: Ban on flying drones: 3,000 policemen for security
× RELATED டெல்லி அலுவலகத்தில் நேரில் ஆஜரான...