×

கோவையில் இருந்து பில்லூர் சென்ற அரசு பஸ்சை வழி மறித்த காட்டு யானைகள்: பயணிகள் பீதி

மஞ்சூர்: கோவையில் இருந்து பில்லூர் சென்ற அரசு பஸ்சை காட்டு யானைகள் கூட்டம் வழி மறித்ததால் பயணிகள் பீதி அடைந்தனர். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது கெத்தை. மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் சாலையில் உள்ள இப்பகுதியில் நீர் மின் நிலையம் மற்றும் குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் உணவு மற்றும் குடிநீர் தேடி குன்னூர் சுற்றுப்புற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து சென்றன. இதனால் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக கெத்தை பகுதியில் யானைகளின் நடமாட்டம் இல்லாததால் இவ்வழியாக இயக்கப்பட்ட அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் சென்று வந்தன.

இந்நிலையில் காட்டு யானைகள் மீண்டும் கெத்தை பகுதிக்கு திரும்பியுள்ளன. கடந்த இரு தினங்களாக 6 காட்டு யானைகள் மந்து, கெத்தை, பெரும்பள்ளம் பகுதிகளில் சுற்றி திரிகின்றன. பெரும்பாலும் சாலைகளிலேயே யானைகள் நடமாடுவதால் அரசு பஸ்கள் மற்றும் தனியார் வாகனங்கள் யானைகளின் வழிமறிப்பில் சிக்கி நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் மாலை கோவையில் இருந்து பில்லூர் பகுதிக்கு சுமார் 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பஸ் சென்றது.அந்த பஸ்சை முள்ளி பிரிவு அருகே குட்டியுடன் நின்ற 5 காட்டு யானைகள் வழிமறித்தது. யானைகளை கண்டவுடன் டிரைவர் பஸ்சை மெதுவாக இயக்கி சாலையோரமாக நிறுத்தினார்.

அப்போது மஞ்சூர் பகுதியில் இருந்து கோவைக்கு சென்ற தனியார் வாகனங்களும் காட்டு யானைகளை கண்டு ஓரங்கட்டி நிறுத்தப்பட்டன. எதிரே காட்டு யானைகளை கண்ட பயணிகள் பீதி அடைந்து வாகனங்களுக்குள் அமர்ந்திருந்தனர். இந்நிலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாலையை மறித்தபடி நின்றிருந்த யானைகள் அங்கிருந்து மெதுவாக சென்று சாலையோரம் இருந்த மண் பாதை வழியாக காட்டுக்குள் இறங்கி சென்றன. இதன்பிறகே அரசு பஸ் மற்றும் தனியார் வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன.

Tags : Wild elephants block Govt bus from Coimbatore to Pillur: passengers panic
× RELATED மேட்டுப்பாளையம் அருகே சுற்றுலா வேன்...