×

அபிஷேக நீரே ‘சஹஸ்ர தேவ தீர்த்தமாக’ சிற்றருவியாக ஓடுகிறது: தேவர்கள் அகம்பாவம் தொலைத்த ஸ்ரீகாளஹஸ்தி வெயிலிங்கால் சஹஸ்ர லிங்கத்தலம்

வேலூர்: சனாதன தர்மத்தில் காணப்படும் புராண கதைகள் வெறும் கதைகள்தான் என்று பகுத்தறிவாளர்கள் கூறினாலும், அதை ஆழ்ந்து படிக்கும்போது அறிவை தெளிவடைய வைக்கும் சிறந்த கருத்துக்கள் அடங்கியிருக்கும் என்பதை அக்கதைகளை படித்தவர்கள் அறிவர். சிறந்த அறிவாளியாக, பலசாலியாக இருந்தாலும் அகம்பாவம் இருந்தால் சிறு துரும்பை கூட அசைக்க முடியாது என்ற தத்துவத்தை விளக்கும் தலமாக விளங்குவது ஸ்ரீகாளஹஸ்தி அருகே உள்ள வெயிலிங்கால் என்னும் சஹஸ்ரலிங்கத்தலம். ‘வெயி’ என்றால் தெலுங்கு மொழியில் ஆயிரம் என்று அர்த்தம். லிங்கால் என்றால் லிங்கங்கள் என்று பொருள். ஆயிரம் லிங்கங்கள் என்பதே வெயிலிங்கால் என்று அழைக்கப்படுகிறது.

ஒருமுறை தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. இந்த போட்டி போராக உருவெடுத்தது. இப்போரில் தேவர்கள் மும்மூர்த்திகளையும், அஷ்டதிக் பாலகர்களையும், நவகிரகங்களையும், வாயு, இந்திரன், வருணன் என யாரையும் அழைக்கவில்லை. போரில் வெல்ல தங்களின் வீரமும், அறிவுமே போதும் என்று நினைத்தனர். விளைவு, போரில் அசுரர்கள் வெற்றிபெறுகின்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தேவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு லிங்கம் என ஆயிரம் லிங்கங்களை பிரதிஷ்டை செய்து 10 லட்சம் வில்வதளங்களால் 10 ஆயிரம் தடவை பூஜை செய்கின்றனர். இப்பூஜைக்கு பிரம்மாவையும், விஷ்ணுவையும் அழைக்கின்றனர். பூஜையின் முடிவில் தேவர்கள் முன்பு தோன்றிய சிவபெருமானிடம், தோல்விக்கு காரணம் கேட்கின்றனர் தேவர்கள். அதற்கு அவர், ‘நீங்கள் அகம்பாவத்துடன் போருக்கு சென்றதால் தோற்றீர்கள்’ என்று பதில் கூறுகிறார்.

மேலும், தர்ப்பை புல் ஒன்றை பறித்து வீசி எறிகிறார். இதை நீங்கள் அழிக்க வேண்டும் என்று கூறி முதலில் அக்னியை அழைக்கிறார். அக்னியால் தர்ப்பை புல்லை அழிக்க முடியவில்லை. தொடர்ந்து வாயு, இந்திரன், பிரம்மா, விஷ்ணு என அனைவரையும் அழைக்கிறார். யாராலும் தர்ப்பை புல்லை அழிக்க முடியவில்லை. அப்போது சிவபெருமான் தேவர்களை நோக்கி, ‘அகம்பாவம் மனதில் இருந்தால் யாராலும் ஒரு சிறு துரும்பையும் அசைக்க முடியாது’ என்று கூறுகிறார்.தங்கள் அறியாமையை நினைத்து வெட்கி தலைகுனிந்த தேவர்கள், சிவபெருமானை பணிந்து போற்றுகின்றனர். மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான், தேவர்கள் ஸ்தாபித்த ஆயிரம் லிங்கங்களை ஒன்று சேர்த்து சஹஸ்ரலிங்கமாக உருவாக்குகிறார். அந்த லிங்கத்துக்கு தேவர்கள் நீரால் அபிஷேகம் செய்கின்றனர்.

இந்த அபிஷேக நீரே ‘சஹஸ்ர தேவ தீர்த்தமாக’ சிற்றருவியாக மலையில் ஓடுகிறது. இதில் குளித்தால் பாவங்கள் தொலைவதாக ஐதீகம். இந்த நீரில் மூழ்கி சஹஸ்ரலிங்கேஸ்வரரையும், சொர்ணாம்பிகையையும் தரிசனம் செய்தால் திருமண தடை நீங்கும், குழந்தை செல்வமும், சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.சுற்றிலும் மலைகள் சூழ்ந்த அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த தலம் வானில் இருந்து பார்க்கும் கருட பார்வையில் மிகப்பெரிய பாம்பு படுத்திருப்பது போல காட்சி தருவது வியப்புக்குரியது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்புதான் சாதாரண மக்களால் சென்று வழிபடும் தலமாக மாறியது. அதற்கு முன்பு வரை துறவிகளும், ஆன்மீகவாதிகளும் மட்டுமே சென்று வந்துள்ளனர். ஜாதகத்தில் கடுமையான தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து பரிகாரம் செய்தால் நிவர்த்தி ஆவதாக நம்பிக்கை. மேலும் இங்கிருந்து திருப்பதி திருமலைக்கு வனப்பகுதி வழியாகவே பாதை உள்ளதாகவும், இந்த பாதையில் வனத்துறையை சேர்ந்தவர்கள் மட்டுமே சென்று வருவதாகவும் கூறுகின்றனர் அப்பகுதி மக்கள்.

கோயிலுக்கு செல்வது எப்படி?
வெயிலிங்கால் தலம் ஸ்ரீகாளஹஸ்தியில் இருந்து 8 கி.மீ தொலைவில் மலைமீது அமைந்துள்ளது. இத்தலத்துக்கு செல்ல சென்னையில் இருந்து அரைமணி நேரத்துக்கு ஒரு பஸ் இயக்கப்படுகிறது. ரயில் மூலம் சென்னையில் இருந்து ரேணிகுண்டா வந்து அங்கிருந்து வெயிலிங்கால் தலத்துக்கு செல்லலாம். அல்லது திருப்பதி பஸ் நிலையத்தில் இருந்தும் பஸ், கார் மூலம் வரலாம். கோயில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை அபிஷேகங்கள் நடக்கிறது.

தங்கள் அறியாமையை நினைத்து வெட்கி தலைகுனிந்த தேவர்கள், சிவபெருமானை பணிந்து போற்றுகின்றனர். மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான், தேவர்கள் ஸ்தாபித்த ஆயிரம் லிங்கங்களை ஒன்று சேர்த்து சஹஸ்ரலிங்கமாக உருவாக்குகிறார்.

Tags : Srikalahasti Weilingal ,Devas Ahmbavam , Devas Agambavam, Srikalahasti, Veilingal Sahasra Lingathalam,
× RELATED சென்னை ஆலந்தூர் அருகே வளர்ப்பு நாய்...