அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகளை தடுக்க பறக்கும் படை: அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்

சென்னை: அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகள் வினியோகத்தை தடுக்கும் வகையில் பறக்கும் படைகளை அமைத்து திடீர் சோதனைகள் நடத்த வேண்டும்’’ என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.  கோவை அரசு மருத்துவமனையில் மருந்துகளை காலாவதியாகச் செய்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், பணி ஓய்வு பலன்கள் வழங்க மறுத்ததை எதிர்த்து மருந்து ஸ்டோர் பொறுப்பாளர் முத்துமாலை ராணி என்பவர் தாக்கல் செய்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் காலாவதியாகாமல் தடுக்க பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த அறிக்கையை அரசு வழக்கறிஞர் ஸ்டாலின் அபிமன்யு தாக்கல் செய்தார்.

 அந்த அறிக்கையில், காலாவதியாகாத மருந்து வழங்க ஏதுவாக கொள்முதல் முதல் விநியோகம் வரை பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது. தேவைக்கும் அதிகமாக ஒரு குறிப்பிட்ட மருத்துவமனையில் மருந்துகள் இருந்தால், அது தேவையுள்ள மற்ற மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படும். ஆறு மாதங்களுக்கு தேவையான மருந்துகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. அரசு மருத்துவமனையில் மருந்துகள் இல்லாவிட்டால் புகார் செய்வதற்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 104 வழங்கப்பட்டுள்ளது. அனைத்து மருத்துவமனைகளிலும் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.

காலாவதியான மருந்துகளை திரும்பி பெற வேண்டும் என்ற உத்தரவாதத்துடன் மருந்து உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து மருந்துகள் கொள்முதல் செய்யப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை குறித்து திருப்தியும், பாராட்டும் தெரிவித்த நீதிபதி, இதை அமல்படுத்த வேண்டும். அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகள் வினியோகத்தை தடுக்கும் வகையில் பறக்கும் படைகளை அமைத்து திடீர் சோதனைகள் நடத்த வேண்டும்.  நாட்டில் பிற மாநிலங்களில் இல்லாத மருத்துவ கட்டமைப்பு தமிழகத்தில் உள்ளது. மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்ய பயோ மெட்ரிக் வருகை பதிவேடு முறையை பின்பற்றலாம். கண்காணிப்பு கேமராக்களை பொருத்தலாம் என்று தெரிவித்து விசாரணையை நவம்பர் 11ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related Stories: