×

ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் குறைந்த கட்டணத்தில் எலக்ட்ரிக் ஆட்டோ சேவை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்

ஆலந்தூர்: ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் குறைந்த கட்டணத்தில் எலக்ட்ரிக் ஆட்டோ சேவையை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று தொடங்கி வைத்தார். சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்துடன் சேர்ந்து தனியார் நிறுவனம் மூலம், ரயில் பயணிகளின் நலனுக்காக குறைந்த கட்டணத்தில் 10 எலக்ட்ரிக் ஆட்டோக்கள் இயக்கி வைக்கும் விழா ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு சென்னை மெட்ரோ ரயில் நிலைய நிர்வாக இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி தலைமை வகித்தார். தனியார் ஆட்டோ நிறுவன தலைவர்கள் மன்சூர்அல், ராஜகோபால், நிதீஸ் சாய்ராம் சுதர்சன் கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு 10 எலக்ட்ரிக் ஆட்டோக்களை ஓட்டுனர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: பயணிகள் நலனுக்காக ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் குறைந்த கட்டணத்தில் எலக்ட்ரிக் ஆட்டோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. போன் செய்தால் 10 நிமிடங்களில் ஆட்டோ உங்கள் வீடு தேடிவரும். முதலில் ஒன்றரை கிலோ மீட்டருக்கு 25 ரூபாயும், அடுத்தடுத்து ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 12 ரூபாய் வசூலிக்கப்படும். இந்த, ஆட்டோ 10 கிலோ மீட்டர் தூரம்வரை இயக்கப்படும். இந்த வாகனம் பாதுகாப்பானது.

எலக்ட்ரிக் ஆட்டோ அறிமுகப்படுத்துவதால் பிற ஆட்டோ தொழிலாளர்கள் சங்கடப்பட தேவை இல்லை. லோக்கல் ஓட்டுனர்களே இதில் பயன்படுத்தப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், முன்னாள் எம்பி ஆர்.எஸ்.பாரதி, ஆலந்தூர் மண்டல குழு தலைவர் என்.சந்திரன், பகுதி திமுக செயலாளர் பி.குணாளன், மாநகராட்சி கவுன்சிலர்கள் நாஞ்சில் பிரசாத், பிருந்தாஸ்ரீ முரளிகிருஷ்ணன், பூங்கொடி ஜெகதீஸ்வரன், சாலமோன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



Tags : Alandur Metro Station ,Minister ,Th.Mo.Anparasan , Alandur, Metro Rail, Low Fare, Electric Auto Service, Minister Th.Mo.Anparasan inaugurated
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...