×

7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது பாகிஸ்தான்: ரிஸ்வான் - பாபர் அபார ஆட்டம்

சிட்னி: உலக கோப்பை டி20 தொடரின் முதல் அரையிறுதியில், நியூசிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் 3வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. ஃபின் ஆலன், கான்வே இருவரும் நியூசி. இன்னிங்சை தொடங்கினர். ஆலன் 4 ரன் மட்டுமே எடுத்து ஷாகீன் அப்ரிடி வேகத்தில் எல்பிடபுள்யு ஆனார். அடுத்து கான்வேயுடன் கேப்டன் கேன் ரிச்சர்ட்சன் இணைந்தார்.

இருவரும் 2வது விக்கெட்டுக்கு 34 ரன் சேர்த்தனர். கான்வே 21 ரன் எடுத்து (20 பந்து, 3 பவுண்டரி) ரன் அவுட்டானது நியூசி. அணிக்கு பின்னடைவை கொடுத்தது. கிளென் பிலிப்ஸ் 6 ரன்னில் வெளியேற, நியூசி. அணி 8 ஓவரில் 49 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில், வில்லியம்சன் - டேரில் மிட்செல் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 68 ரன் சேர்த்தனர். வில்லியம்சன் 46 ரன் (42 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து அப்ரிடி வேகத்தில் கிளீன் போல்டானார். கடைசி கட்டத்தில் டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம் அதிரடியில் இறங்க, நியூசிலாந்து 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 152 ரன் எடுத்தது. மிட்செல் 53 ரன் (35 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), நீஷம் 16 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பாகிஸ்தான் பந்துவீச்சில் ஷாகீன் அப்ரிடி 2, முகமது நவாஸ் 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 153 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. முகமது ரிஸ்வான், கேப்டன் பாபர் ஆஸம் இருவரும் இணைந்து துரத்தலை தொடங்கினர். பொறுப்புடன் விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 12.4 ஓவரில் 105 ரன் சேர்த்து வலுவான தொடக்கத்தை கொடுத்தது. பாபர் 53 ரன் (42 பந்து, 7 பவுண்டரி), ரிஸ்வான் 57 ரன் (43 பந்து, 5 பவுண்டரி) விளாசி போல்ட் வேகத்தில் பெவிலியன் திரும்பினர். முகமது ஹாரிஸ் 30 ரன் (26 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி சான்ட்னர் சுழலில் ஆலன் வசம் பிடிபட்டார்.

பாகிஸ்தான் 19.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன் எடுத்து வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஷான் மசூத் (3), இப்திகார் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். 2007ல் 2வது இடம், 2009ல் சாம்பியன் பட்டம் வென்ற பாகிஸ்தான், தற்போது 3வது முறையாக டி20 உலக கோப்பை பைனலுக்குள் நுழைந்து அசத்தியுள்ளது. ரிஸ்வான் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்தியா - இங்கிலாந்து இடையே இன்று  நடக்கும் 2வது அரையிறுதியில் வெற்றி பெறும் அணி, மெல்போர்னில் நவ. 13ம் தேதி பாகிஸ்தான் அணியுடன் பைனலில் மோதும்.



Tags : Pakistan ,New Zealand ,Rizwan - Babar , 7 wicket difference, New Zealand beat Pakistan, Rizwan - Babar Abara, match
× RELATED 2-2 என தொடரை சமன் செய்தது பாக்.