×

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான மின் கட்டணம் 10% குறைப்பு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மின்கட்டணம் 10 சதவீதம் குறைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஒன்றிய அரசு தொடர்ந்து கொடுத்த நெருக்கடி காரணமாக தமிழ்நாடு மின்சார வாரியம் மின் கட்டணத்தை உயர்த்தியது. அதுவும் நடுத்தர மற்றும் விவசாயிகள் பாதிக்காத வகையில் இந்த மின் கட்டண உயர்வு மாற்றி அமைக்கப்பட்டது. அதில் சிறு மற்றும் குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் இந்த கட்டண உயர்வால் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தொழில் துறையினர் மனு அளித்தனர். இந்த மனு மீது மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மின்வாரிய தலைவர் ராஜேஷ் லகானி ஆகியோர் தொழில் துறையினரிடம் தீவிர ஆலோசனை நடத்தினர்.

இந்தநிலையில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2022-23ம் ஆண்டிற்கான திருத்தி அமைக்கப்பட்ட மின்சாரக்கட்டணம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நடைமுறைப்படுத்தப்பட்டன. அதன்படி, உயர்த்தப்பட்டுள்ள மின்சார கட்டணம் என்பது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிகப்படியான கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளதால், ஒருநாளின் உச்சபட்ச பயன்பாடு நேரத்தில் விதிக்கப்பட்ட மின்கட்டணத்தை குறைக்கும்படி, பல்வேறு குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதன்படி, குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு வழங்குவதில் முக்கிய பங்காற்றுவதை கருத்தில் கொண்டு அவர்களின் கோரிக்கையினை ஏற்று குறைந்தழுத்த மின் இணைப்பு கொண்ட தொழில் நிறுவனங்களுக்கு உச்சபட்ச பயன்பாட்டு நேரத்தில் வசூலிக்கப்படும் மின்கட்டணத்தை 25 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக குறைக்கலாம் என முடிவு செய்து  உரிய கொள்கை வழிகாட்டுதல் வழங்க அரசு ஆணையிட்டுள்ளது. மேலும், மின்கட்டணத்தை குறைப்பதால் தமிழகத்தில் உள்ள குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அதிகளவில் பயனடையும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு வழங்குவதில் முக்கிய பங்காற்றுகிறது.
* இதை கருத்தில் கொண்டு அவர்களின் கோரிக்கையினை ஏற்று குறைந்தழுத்த மின் இணைப்பு கொண்ட தொழில் நிறுவனங்களுக்கு உச்சபட்ச பயன்பாட்டு நேரத்தில் வசூலிக்கப்படும் மின்கட்டணத்தை 25 சதவீததிலிருந்து 15 சதவீதமாக குறைக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu Government , 10% reduction in electricity charges for MSMEs: Tamil Nadu Government Notification
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...