பள்ளிபாளையத்தில் பட்டபகலில் துணிகரம் வயதான தம்பதியை கட்டிப்போட்டு ₹28 லட்சம், 20 பவுன் கொள்ளை-காரில் வந்த 9 பேர் கும்பல் கைவரிசை

பள்ளிபாளையம் :  பள்ளிபாளையம் அருகே பட்டப்பகலில் மில் அதிபரின் வீட்டில் புகுந்து பெற்றோர்களை கட்டிப்போட்டு ₹28லட்சம் பணம் மற்றும் 20 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். அவர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே வெடியரசம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். நூற்பாலையில் பங்குதாரராக உள்ளார். விசைத்தறி ஜவுளி உற்பத்தியிலும் ஈடுபட்டு வருகிறார். டெக்ஸ்டைல் நிறுவனத்திற்கு அருகிலேயே அவரது தந்தை மணியண்ணன்(70), தாயார் பழனியம்மாள்(65) ஆகியோர் வசித்து வருகின்றனர். அருகில் உள்ள மற்றொரு வீட்டில் பிரகாஷ் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

நேற்று மதியம் 2 மணியளவில் மணியண்ணன் வீட்டிற்குள் கார் ஒன்று திடீரென நுழைந்தது. அந்த கார்  போர்டிகோவில் போய் நின்றது. காரில் இருந்து 9 பேர் திபு திபுவென இறங்கினர். அவர்களில், 6 பேர் அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்தனர். 3 பேர் மக்களின் நடமாட்டத்தை நோட்டமிட்டபடி வெளியில் இருந்துள்ளனர். பின்னர், அவர்களும் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த மணியண்ணனை கத்தி முனையில் மிரட்டியுள்ளனர்.

மேலும், இருவரும் சத்தம் போடாமல் இருக்க அவர்களது வாயில் பிளாஸ்டர் ஒட்டி அடைத்தனர். பின்னர், கையை கட்டி கீழே படுக்க வைத்துள்ளனர். தொடர்ந்து பீரோவில் இருந்த ₹28 லட்சம் ரொக்க பணம் மற்றும் 20 பவுன் நகைகளை எடுத்துக்கொண்ட கும்பல் வந்த வழியே காரில் ஏறி தப்பினர். மதியம் 2.06 மணிக்கு நுழைந்த கொள்ளை கும்பல் 2.14 மணிக்கு அங்கிருந்து வெளியேறியது. 8 நிமிடங்களுக்குள் தாங்கள் வந்த வேலையை முடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர்.

கொள்ளையர்கள் தப்பிச்சென்ற பிறகு கட்டுகளை விடுவித்துக் கொண்ட இருவரும் அருகில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்த தகவலின்பேரில், பள்ளிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், எஸ்பி சாய்சரண் தேஜஸ்வியும் நேரடி விசாரணை நடத்தினார். சம்பவம் நடந்த வீட்டில் இருந்த சிசிடிசி கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டார்.

இதுகுறித்து எஸ்.பி. கூறும்போது, ‘சொகுசு காரில் வந்த ஒரு கும்பல், தனியாக இருந்த முதியவர்களை மிரட்டி நகை -பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவத்தில் துப்பு துலக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். கொள்ளையர்கள் தப்ப முடியாது. அவர்களை விரைவில் பிடித்துவிடுவோம்’ என்றார்.பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: