துடியலூர், தடாகம் பகுதியில் பல்வேறு கெட் அப்பில் கலக்கும் கொள்ளையன்-வாட்ஸ் அப் குரூப் மூலம் போலீசார் விழிப்புணர்வு

பெ.நா.பாளையம் :  துடியலூரில் பல்வேறு கெட் அப்பில் கலக்கி வரும் கொள்ளையன் குறித்து போலீசார் வாட்ஸ் அப் குரூப் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

கோவை, துடியலூர் தடாகம் பகுதியில் இரவு நேரங்களில் இரவு நேரங்களில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கும் சம்பவம் அதிகரித்து வந்தது. இது குறித்து வந்த புகார்களின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். பல இடங்களில் ஒரே நபர் பல கெட் அப்களில் நடமாடியிருப்பது தெரியவந்தது.

ஒரு பதிவில் இரவு வேலை முடிந்து வீடு திரும்பும் தொழிலாளி போன்றும், மற்றொரு பதிவில் வெளியூரில் இருந்து ஊருக்கு வருவதுபோன்றும் உடை அணிந்திருந்தார். இதேபோன்ற பல தோற்றங்களில் அவர் உலா வந்து கைவரிசை காட்டியது தெரியவந்தது. ரோந்து போலீசார் நேரில் பார்த்தாலும் சந்தேகப்படாத வகையில் அவரது நடவடிக்கைகள் இருந்தது. பழைய குற்றவாளிகளின் வரிசையில் ஒப்பிட்டு விசாரித்தும் திருடனை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்படுகிறது.

எனவே இந்த இரவு நேர திருடனை பிடிக்க போலீசார் வித்தியாசமான தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். அதன்படி  பல பகுதிகளில் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள நபரின் வீடியோவை காவல்துறையுடன் தொடர்பில் உள்ள அனைத்து வாட்ஸ் அப் குழுவிற்கும் அனுப்பி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

தடாகம் போலீசார் சார்பில் பதிவிட்டுள்ள வீடியோவில் மேற்படி நபர் தடாகம், பன்னிமடை, கணுவாய், வடமதுரை, தொப்பம்பட்டி ஆகிய பகுதிகளில் வீடுகளை உடைத்து திருடியுள்ளார். இவரை பற்றிய தகவல் தெரிந்தால் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுக நயினார் என்பவரின் 8300017042 என்று  செல்போன் எண்ணில் தகவல் தெரிவிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

போலீசாரின் இந்த முயற்சி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் குற்றம் குறையவும் திருடர்களை பிடிக்கவும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: