×

கொடைக்கானலில் 120 ஆண்டுகால பழமையான மார்க்கெட் இடிக்கப்பட்டு ரூ.2.6 கோடி மதிப்பில் புதிய காய்கறி மார்க்கெட்-மலைவாழ் மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம்

கொடைக்கானல் : கொடைக்கானலில் 120 ஆண்டுகால பழமையான மார்க்கெட் இடிக்கப்பட்டு அதே இடத்தில் ரூ.2.6 கோடி மதிப்பில் புதிய காய்கறி மார்க்கெட் கட்டும் பணிகள் தொடங்கியுள்ளன.கொடைக்கானல் அண்ணா சாலை பகுதியில் 1902ம் ஆண்டில் இந்த காய்கறி மார்க்கெட் அமைக்கப்பட்டதாக கல்வெட்டு கூறுகிறது. மேலும் 120 ஆண்டுகளைக் கடந்த இந்த காய்கறி மார்க்கெட் பல ஆட்சி காலங்களில் புதுப்பிக்கப்படாமலும் அப்படியே விடப்பட்டது. இதனால் தனது கட்டிடத்தின் வலிமையை கொஞ்சம் கொஞ்சமாக அது இழந்து வந்தது. கொடைக்கானலில் விளையக்கூடிய காய்கறிகளை மட்டும் இந்த மார்க்கெட்டில் பிரத்தியேகமாக வியாபாரிகள் விற்பனை செய்து வந்தனர்.

வேறு எங்கும் காய்கறிகள் கிடைக்காத பொழுது புதிதாக பறித்த காய்கறிகள் உடனடியாக இந்த மார்க்கெட்டில் விற்பனை செய்வது இதன் சிறப்பாக இருந்து வந்தது. இந்த பகுதியிலேயே சில இறைச்சிக்கூடங்களும் இருந்தது. 120 ஆண்டுகளைக் கடந்த நிலையில் இந்த காய்கறி மார்க்கெட் பகுதியை புதுப்பிக்க, புதிதாகக் கட்ட பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் பல பின்னடைவுகள் ஏற்பட்டு இந்த பணி நடக்காமலேயே போய்விட்டது.

பல நகர் மன்ற தலைவர்கள் இதற்கான முயற்சிகளை எடுத்தாலும் அந்த பணி முழுமையாக நிறைவேறவில்லை. வியாபாரிகள் தரப்பில் நீதிமன்றம், வழக்கு உள்ளிட்ட தடைகளால் இந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டு விட்டன. பொதுமக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் வியாபாரிகளுக்கும், இதனால் பயன் ஏற்படாமல் பாழடைந்த கட்டிடமாக இந்த காய்கறி மார்க்கெட் இருந்தது.
தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள நகர் மன்றம் நகர் மன்ற தலைவர் செல்லத்துரை, துணை தலைவர் மாயக்கண்ணன், இந்த பகுதியில் வார்டு கவுன்சிலர் அப்பாஸ் அலி ஆகியோர் பழநி தொகுதி எம்எல்ஏ ஐபி செந்தில்குமாரிடம் புதிய காய்கறி மார்க்கெட் கட்டுவது குறித்து பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகள் சார்பில் கோரிக்கை வைத்தனர்.

பழநி எம்எல்ஏவின் தனிப்பட்ட முயற்சியின்  காரணமாக தமிழக அரசு ரூ. 2.6 கோடி செலவில் இந்த பழமை வாய்ந்த மார்க்கெட் புதிதாக அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதனை தொடந்து 120 ஆண்டுகால பழமையான மார்க்கெட் இடிக்கும் பணிகள் தற்போது  நடைபெற்று வருகிறது. இதனை புதிய காய்கறி மார்க்கெட் கட்டும் பணிகளும் தற்போது தீவிரமடைந்துள்ளது.

இந்த காய்கறி மார்க்கெட் புதிதாக அமைக்கப் பட்டால் கொடைக்கானலில் உள்ள மலை காய்கறி விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
இந்த மார்க்கெட் பகுதியில் அமைக்கப்படும் காய்கறி கடைகளில் மலைப்பகுதி விவசாயிகள் தங்களது விளை பொருட்களை இங்கு நல்ல விலைக்கு விற்க முடியும். அதே போல பொது மக்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் பிரஷ்ஷான மலை காய்கறிகள் உடனடியாக கிடைக்கும். அதே போல பல்வேறு நன்மைகளை இந்த புதிய காய்கறி மார்க்கெட் மூலம் கொடைக்கானல் மக்கள் அடைய முடியும்.

கொடைக்கானல் அண்ணா சாலை பகுதி தான் முன்பு கடைவீதி பகுதியாக இருந்தது. அதற்கு முக்கிய காரணமாக விளங்கியது இந்த காய்கறி மார்க்கெட் பகுதி தான். பின்னர் பல்வேறு காரணங்களால் அண்ணா சாலை பகுதி சுற்றுலா பயணிகள் வந்து செல்ல குறுகிய சாலையாக மாறிவிட்ட காரணத்தால் கமர்சியல் பகுதி என்ற அந்தஸ்தை இழந்தது. தற்போது இந்த காய்கறி மார்க்கெட் புதிதாக அமைக்கப்பட்டு இங்கு கார் பார்க்கிங் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படுத்தினால் மீண்டும் அண்ணா சாலை கமர்சியல் பகுதி என்ற அந்தஸ்தை அடையும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

இது பற்றி இந்த பகுதி நகர்மன்ற உறுப்பினர் அப்பாஸ் அலி கூறுகையில், ‘‘நமது தொகுதியின் எம்எல்ஏ. ஐபி. செந்தில்குமார் தேர்தல் பரப்புரையின் போது கொடுத்த பல்வேறு வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அவர் கொடுத்த வாக்குறுதியில் இந்த காய்கறி மார்க்கெட் புதிதாக அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். அவரது வாக்குறுதி படி தற்போது ரூ.2.6 கோடி மதிப்பில் இந்த புதிய மார்க்கெட் அமைப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த புதிய மார்க்கெட் அமைவதால் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். அண்ணா சாலை புது பொலிவு பெரும். வியாபாரிகள் குறிப்பாக சிறு வியாபாரிகள் ,விவசாயிகள் மிகுந்த பலனை அடைவார்கள்’’என்றார்.

பிரியாவிடை கொடுத்த மக்கள்

120 ஆண்டுகள் பழமையான காய்கறி மார்க்கெட் புதிய காய்கறி மார்க்கெட் அமைக்கப்படுவது பற்றி இப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது, ‘‘கொடைக்கானல் அண்ணா சாலையில் புதிய காய்கறி மார்க்கெட் வணிக வளாகம் அமைவது வரவேற்கத்தக்கது. 120 ஆண்டு பழமையான கட்டிடம் அகற்றப்படுவது வேதனையாக இருந்தாலும், புதிய கட்டிடம் அமைக்கப்படுதால் மேலும் அதிக பலன்கள் கிடைக்கின்றன. முறையாக பராமரிக்கப்பட்டிருந்தால் 120 ஆண்டுகள் பழமையான கட்டிடம் தற்போது பழமை புதுமையாக இருந்திருக்கும்.

காரணம் இந்த பகுதியில் கமர்சியல் அந்தஸ்தை பெற்றுகொடுத்த பெருமை இந்த காய்கறி மார்க்கெட்டிற்கு சேரும். அதனால் இந்த கட்டிடத்தை பிரிவது என்பது சற்று வருத்தமாக தான் உள்ளது. ஆனாலும் கட்டிடத்தில் உறுதியற்ற தன்மை இங்கு வரும் பொது மக்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் வியாபாரிகளுக்கு பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கியது. எனவே இந்த கட்டிடம் புதுப்பிப்பது வரவேற்கத்தக்கது. அத்துடன் புதிய கட்டிடங்களில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படலாம். கூடுதல் கடைகள் அமைக்கலாம்’’ என்றனர்.

Tags : Kodaikanal , Kodaikanal: A 120-year-old market in Kodaikanal has been demolished and a fresh vegetable worth Rs 2.6 crore has been constructed in the same place.
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்