×

மதுரையில் பரபரப்பு 14 அடி பாதாள சாக்கடை பள்ளத்தில் மூழ்கி தொழிலாளி பலி: 4 மணி நேரம் போராடி உடல் மீட்பு

மதுரை: மதுரையில் 14 அடி பாதாள சாக்கடை பள்ளத்தில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக பலியானார். 4 மணி நேரத்திற்கு பின் உடல் போராடி மீட்கப்பட்டது. மதுரை மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகிறது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் மூலம் இந்தப்பணிகள் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி, மதுரை கூடல்புதூர், அஞ்சல் நகரில் நடந்து வரும் பாதாளசாக்கடை பணியில், ஈரோடு மாவட்டம், குப்பந்தபாளையம் அருகே கரட்டூரை சேர்ந்த சக்திவேல்(35), 14 அடி ஆழ பாதாள சாக்கடை பள்ளத்தில் இறங்கி நேற்று பகலில் பிளம்பிங் வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும்போது குடிநீர்  குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் பெருக்கெடுத்து வந்தது. அப்போது பள்ளத்தில் வேலை செய்து கொண்டிருந்த சக்திவேல் மீது மணல்  சரிந்து விழுந்தது. இதனால் சக்திவேல் மூழ்கத்தொடங்கினார். அவரை மீட்கும் பணியில் தொழிலாளர்கள், பொதுமக்கள் ஈடுபட்டனர்.  பம்ப் வைத்து அங்கிருந்த தண்ணீரையும் வெளியேற்றினர். ஆனால், மண்ணில் புதைந்தவரை மீட்க முடியவில்லை.  தகவலறிந்து தல்லாகுளம் தீயணைப்புத்துறையினர் 16 பேர், சுமார் 4 மணி நேரம்  போராடி சக்திவேலை பிணமாக மீட்டனர். இது குறித்து கூடல்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Madurai , Laborer dies after drowning in 14-feet underground sewer pit in Madurai: 4-hour struggle to recover
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை