×

அரசு நிர்வாகத்தில் நேரடி தலையீடு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் எதேச்சதிகாரம்: அத்துமீறும் ஆளுநர்கள்; செக் வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வியூகம்

ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு கவர்னர் பதவியும் அவசியமில்லாதவை என்றார் அறிஞர் அண்ணா. இதை இன்றைக்கு மீண்டும் விவாதப் பொருளாக மாற்றிவிட்டனர் சில ஆளுநர்கள். பாஜ ஆளும் மாநிலங்களில் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் ஆளுநர்கள், எதிர்க்கட்சிகள் அதிலும் குறிப்பாக பாஜவுக்கு வேண்டாத கட்சி ஆட்சியில் உள்ள மாநிலங்களில் எதேச்சதிகாரம் செய்யும் சர்வாதிகாரிகளாகவே மாறிவிடுகிறார்கள். அண்மையில், ஒன்பது பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் உடனே ராஜினாமா செய்ய வேண்டும், நிதி அமைச்சர் எனது நம்பிக்கையை இழந்துவிட்டார் அதனால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அடுத்தடுத்து சர்ச்சைகளை கிளப்பினார் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியோ சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு அங்கீகாரம் அளிக்காமல் தாமதம் செய்வதில் துவங்கி, ஊர், ஊராக சென்று ஆன்மிகம், சனாதனம், ஆரியம் பற்றி பேசுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார். இருநூறு ஆண்டுகள் நம்மை ஆண்ட ஆங்கிலேய ஆட்சியின் எச்சங்களில் மிச்சமானவற்றில் ஒன்றுதான் இன்றைய ஆளுநர் பதவி. ஆங்கிலேயர் ஒவ்வொரு மாகாணத்திலும் இங்கிலாந்து மன்னர் அல்லது ராணியின் பிரதிநிதியாக, சர்வாதிகாரியாக ஆளுநர்களை நியமித்திருந்தனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் ராணுவ அதிகாரிகளே. நியாயமாக பார்த்தால் சுதந்திர இந்தியாவில் இந்த பதவியே தேவையில்லை. ஆனால், ஒன்றிய அரசின் ஏஜென்ட் ஒருவர் ஒவ்வொரு மாநிலத்திலும் வேண்டும் என்பதால் இந்த பதவி சுதந்திர இந்தியாவிலும் நீடிக்க  பச்சைக் கொடி காட்டினார்கள் நம் அரசியல் தலைவர்கள். ஆங்கிலேயர் ஆட்சி கால சர்வாதிகார அதிகாரம் ஆளுநர்களுக்கு இல்லாதபோதும், அவ்வப்போது மாநில அரசுகளுக்கு குடைச்சல் கொடுக்க ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு ஆளுநர்கள் பயன்பட்டனர்.

அரசு அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது, சட்டப்பேரவை கூட்டத்தை கூட்டுவது, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களில் பங்கேற்பது, ராஜ்பவனில் ஆண்டுக்கு சில முறை தேநீர் விருந்தளிப்பது, பொது விழாக்களில் பங்கேற்பதே ஆளுநர்களின் முக்கிய வேலை. பிடிக்காத எதிர்க்கட்சியின் ஆட்சி என்றால் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்று அறிக்கை அனுப்பி அரசியல் சட்டத்தின் 356வது பிரிவின் கீழ் ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வழி செய்வது அவ்வப்போது நடைபெறும் சம்பவம். கர்நாடக மாநில முதல்வராக இருந்த பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு பிறகு மாநில அரசுகளை இஷ்டத்துக்கு டிஸ்மிஸ் செய்வது இயலாத ஒன்றாகிவிட்டது.

இதனால், ஆளுநரை வைத்துக் கொண்டு பெரிய அளவில் எதுவும் சாதிக்க முடியாத நிலை. ஆனால், 2014ல் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சியை பிடித்த பாஜவின் திட்டமோ வேறு. ஒரே நாடு ஒரே கட்சியின் ஆட்சி என்ற பாஜவின் பேராசையின் காரணமாக ஆளுநர்கள், ஆளும் பாஜவின் பிரசாரகர்களாகவே மாற்றப்பட்டனர், மாறிவிட்டனர். எதிர்க்கட்சிகளின்  ஆட்சி நடக்கும் மாநிலங்களிளெல்லாம் ஆளுநர்கள் அத்துமீறினர். தமிழ்நாட்டில் பன்வாரிலால் புரோகித், ஆர்.என்.ரவி, புதுச்சேரி கிரண்பேடி, மகாராஷ்டிரா கோஷ்யாரி, கேரளா ஆசிப் முகமது கான், மேற்கு வங்கத்தில் ஜெகதீப் தன்கர் (இன்றைக்கு துணை ஜனாதிபதி), தெலங்கானாவில் தமிழிசை, டெல்லியில் வினய் குமார் சக்ஸ்சேனா என்று நீள்கிறது அத்துமீறும் ஆளுநர்களின் பட்டியல்.

2021 செப்டம்பரில் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டவர்தான் மாஜி ஐ.பி.எஸ் அதிகாரி ஆர்.என்.ரவி. பிரிவினைவாதிகளால் பிரச்னைகளை சந்திக்கும் மாநிலங்களில் மட்டும் இதுபோல மாஜி ஐ.பி.எஸ் அதிகாரிகளை நியமிப்பது வழக்கம்.  அமைதி பூங்காவான தமிழகத்தில் ஐ.பி.எஸ் அதிகாரியை ஆளுநராக நியமித்தது சர்ச்சையை கிளப்பியது. தமிழக சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட 21 சட்ட மசோதாக்களை கண்டுகொள்ளாமல் நீண்டகாலமாக கிடப்பில் போட்டார் ஆளுநர் ரவி. சட்டம் அமலானால்தானே மக்களுக்கு அதன் பலன் கிடைக்கும். இதனால்,  முதல்வர் மு.க.ஸ்டாலினே  அமைச்சர்களுடன் நேரில் சென்று ஆளுநரை சந்தித்தார்.  

அதன்பிறகும் சில மசோதாக்களுக்கு மட்டுமே ஒப்புதல் கிடைத்தது. நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநரின் அரசியலை, அந்த மசோதாவை மீண்டும் சட்டப்பேரவையில்  நிறைவேற்றி முறியடித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அத்தோடு, அமைதியாக இருந்தாரா ஆளுநர் ரவி. இல்லையே. எந்த விழாவுக்கு போனாலும், சனாதனம், ஆரியம் பற்றியே பேசும் அவர், தமிழகம் ஆன்மிக பூமி என்றதோடு திருவள்ளுவருக்கு மதசாயம் பூசும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி வருகிறார்.

கேரளாவை பொறுத்தவரை ஆளுநராக உள்ள ஆரிப் முகமது கான் பதவி ஏற்ற நாள் முதல், முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி அரசுக்கு குடைச்சல் கொடுப்பதையே தனது ஒற்றை இலக்காக கொண்டுள்ளார். அண்மையில், 9 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார். அந்த சர்ச்சை ஓய்வதற்குள், கேரள நிதி அமைச்சர் பாலகோபால் என்னுடைய நம்பிக்கையை இழந்துவிட்டார். அவரை உடனடியாக டிஸ்மிஸ் செய்யுங்கள் என்று முதல்வருக்கே கடிதம் எழுதினார், ஆளுநர். ஆனால் முதல்வர் பினராயி விஜயன், கவர்னரின் கோரிக்கையை உடனடியாக நிராகரித்து விட்டார். இது தொடர்பாக அவர் கவர்னருக்கு அதிரடியாக பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

‘‘மக்களால் மக்களுக்காக நடத்தப்பெறும் அரசாங்கம்” என்பதுதான் மக்களாட்சியின் இலக்கணம். பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களுக்கு மக்களுக்கு எதை, எப்போது, எப்படி செய்ய வேண்டும் என்பது தெரியும். மக்கள் நலனுக்கான திட்டங்கள், சட்டங்கள் இயற்றுவது அரசின் கடமை. அப்படி, நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்களுக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டியதுதான் ஆளுநர்களின் வேலை. ஆனால், அதை கூட செய்யாமல் காலதாமதம் செய்து அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதோடு, அரசு அதிகாரிகளை நேரில் அழைத்து திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து அரசின் நிர்வாகத்தில் நேரடியாக தலையிடுவது அபத்தமானது, ஆபத்தானது என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

உச்சகட்டமாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அண்மையில் ‘‘இந்தியாவை மதச்சார்பற்ற நாடு எனச் சொல்கின்றனர். எந்த ஒரு நாடும் ஏதாவது ஒரு மதத்தைச் சார்ந்துதான் இருக்க முடியும். அதில் இந்தியா விதிவிலக்கு அல்ல’’ என்று பேசி இருக்கிறார். உடனடியாக, திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, ஆளுநருக்கு எதிராக கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். இந்திய அரசியலமைப்பு சட்டத்தில்  இந்தியாவை மதச்சார்பற்ற நாடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக பேசுவதென்றால், பதவியில் இருந்து விலகிவிட்டு கருத்துக்களை சொல்லட்டும் என்று ஆளுநரை சாடி உள்ளனர்.

ஆளுநரின் அதிகாரம் மிகவும் குறுகியது. டெல்லி அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே நடந்த வழக்கில் அமைச்சரவையின் ஆலோசனைப்படி ஆளுநர்  செயல்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.  மாநில முதல்வருடன் கலந்தாலோசித்த பிறகே ஆளுநரை நியமிக்க வேண்டும் என்று 1983ல் ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் பரிந்துரைத்துள்ளது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஆளுநரின் அதிகாரம் என்ன? என்பதை வரையறுத்து மாநில அரசின் நிர்வாகத்தில் அவர் தலையிட தடை விதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

அப்படி செய்தால்தான் எதேச்சதிகாரம் செய்யும் ஆளுநர்களை தடுக்க முடியும். இதற்கான முன்னெடுப்புகளை சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இப்போதே தொடங்க வேண்டியது கட்டாயம். இதற்கு அச்சாரம் போட்டிருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக் கோரி குடியரசு தலைவரிடம் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் மனு கொடுக்க முடிவு செய்துள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த வியூகம் அத்துமீறும் ஆளுநர்களுக்கு செக் வைக்க சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை.

* தேநீர் விருந்து புறக்கணிப்பு
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதும், அதை மீண்டும் நிறைவேற்றி அவருக்கே திருப்பி அனுப்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அப்போதும் ஆளுநர் ரவி காலதாமதம் செய்யவே, கடந்த ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி, தமிழ் புத்தாண்டையொட்டி ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு புறக்கணித்தது.

* பன்வாரிவாலை கண்டிக்க துணிவில்லாத அதிமுக
தமிழகத்தை பொறுத்தவரை பன்வாரிலால் புரோகித், அரசு நிர்வாகத்தில் மூக்கை நுழைத்த முதல் ஆளுநர். 2017ல் ஆளுநராக பதவியேற்ற அவர், கோவையில் நடந்த பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்காக சென்றபோது, அரசு அதிகாரிகளை அழைத்து திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்தினார். இதை அப்போது ஆளும் கட்சியான அதிமுகவை தவிர்த்து அனைத்து கட்சிகளும் கடுமையாக ஆட்சேபித்தன. அதிமுகவினர் மோடி எங்கள் டாடி என்று பெருமையாக பேசிக்கொண்டே புரோகித்தின் அத்துமீறலை கண்டுகொள்ளாமல் இருந்து விட்டனர். இது புரோகித்துக்கு இன்னும் தைரியத்தை கொடுத்தது. விளைவு பல ஊர்களில் தமிழக அரசு அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார். எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. தமிழக பல்கலைக்கழகங்களில் வெளி மாநிலத்தவரை துணைவேந்தர்களாக நியமித்தார். ஆனாலும், கடைசிவரை பன்வாரிலாலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே இல்லை அதிமுக. இப்போது, பஞ்சாப் ஆளுநராக இருக்கும் பன்வாரிலால் புரோகித், எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிகள் ரூ.50 கோடிக்கு விற்கப்பட்டதாக பகிரங்கமாக புகார் தெரிவித்துள்ளார்.

* ராஜ்பவனில் உண்ணாவிரதம் இருந்த ஆளுநர்
கடந்த 2021 ஜூலை மாதம் கேரளாவில் வரதட்சணைக்கு எதிராக ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தை ராஜ்பவனிலேயே மேற்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார் ஆளுநர் ஆரிப் முகமது கான். இந்தியாவில் ஆளுநர் ஒருவர் உண்ணாவிரதம் இருந்தது அதுவே முதல்முறை.

* தகுதியிழந்த ஜெயலலிதாவுக்கு பதவி பிரமாணம் செய்த பாத்திமா பீவி
உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி என்ற பெருமையை பெற்றவர் பாத்திமா பீவி. இவர் கடந்த 1997 முதல் 2001 ஜூலை வரை தமிழக ஆளுநராக பதவி வகித்தார். 2001ல் நடந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில், டான்சி வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதால் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்த ஜெயலலிதா வேண்டுமென்றே ஆண்டிபட்டி, கிருஷ்ணகிரி, புவனகிரி, புதுக்கோட்டை ஆகிய நான்கு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்ய,  இந்த நான்கும் நிராகரிக்கப்பட்டன. ஆனால், அந்த தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றது.

ஆனால், தேர்தலில் போட்டியிடவே தகுதியற்ற ஒருவரான ஜெயலலிதாவுக்கு முதல்வராக, ஆளுநர் பாத்திமா பீவி பதவி பிரமாணம் செய்து வைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர், ஜெயலலிதாவின் பதவி ஏற்புக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை, ஐந்து நீதிபதிகள் இடம் பெற்ற, அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்து, ‘ஜெயலலிதாவின் பதவி பிரமாணம் செல்லாது’ என, அறிவித்தது. இதையடுத்து, முதல் முறையாக, 2001 செப்., 21ல், முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். அதற்கு முன்னதாகவே அவரை திரும்ப அழைக்க ஒன்றிய அமைச்சரவை முடிவு செய்ய, வேறு வழியின்றி 2001 ஜூலை 3ம் தேதி தனது பதவியை பாத்திமா பீவி ராஜினாமா செய்துவிட்டார்.

ஆளுநரைத் திரும்பப் பெறுதல்
* ஆளுநரின் பதவிக் காலம் 5 ஆண்டுகள். இடைப்பட்ட காலத்தில் அவர் ராஜினாமா செய்யலாம் அல்லது ஜனாதிபதி அவரை திரும்ப பெறலாம்.
* அரசியல் சாசனம் வகுத்துள்ள விதிகளை மீறி ஆளுநர் ஒருவர் நடந்துகொள்கிறார் அல்லது ஆளுநர் பதவி வகிக்கும் தகுதியை இழந்துவிட்டார் என தெரிந்தால் ஜனாதிபதி ஆளுநரைத் திரும்பப் பெறும் உத்தரவை பிறப்பிக்கலாம்.
* ஆளுநருக்கு எதிராக மாநில சட்டப்பேரவையிலோ, நாடாளுமன்றத்திலோ கண்டன தீர்மானம் (impeachment) எதுவும் நிறைவேற்ற இயலாது.

Tags : CM ,Stalin , Direct interference in government administration Autocracy in opposition-ruled states: overbearing governors; CM Stalin's strategy to keep check
× RELATED குமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி...